சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் , கால்வாய்களில் பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மேலும் 13,000 தன்னார்வளர்களை பணியில் இறங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் ‘அதி கனமழை ‘ பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ரிப்பன் மாளிகையிலுள்ள ‘ ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் , சுரங்கப்பாதைகள் , தாழ்வான இடங்கள் , கடந்த காலங்களில் மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகள் போன்றவற்றை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பார்வையிடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் துணை முதலமைச்சருக்கு விளக்கமளித்தனர்.
மேலும் ஆய்வின்போது கட்டுப்பாட்டு மையத்தின் புகார் எண்ணுக்கு வந்த சில தொலைபேசி அழைப்புகளை எடுத்துப் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் புகார் குறித்து உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு நடத்தியுள்ளோம்.
தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் அதி தீவிர கனமழையாக 20 செ.மீ க்கு மேல் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
மழைக்காலத்தில் பொதுமக்கள் புகாரளிக்கும் வகையில் 1913 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வகையில் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் 150 பணியாளர்கள் 4 ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
சமூக வலைதளம் , வாட்ஸ் அப்,நம்ம சென்னை தளம் மூலமும் மழை குறித்த தகவலை பொதுமக்கள் பெற முடியும். அரசுடன் இணைந்து மழைக்காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 113 மோட்டார்பம்புகள் வைக்கப்பட்டுள்ளன.மழைநீர் தேங்க வாய்ப்புள்ள 31 ரயில்வே கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையம் தயார் நிலையில் உள்ளது. Tamilmadu alert என்ற புதிய செயலியில் மழை குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் .மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாத இடங்களில் பொதுமக்களோ , வாகனங்களோ அவற்றில் விழுந்து விடாமல் இருக்கும் வகையில் அதுபோன்ற இடங்களைச் சுற்றி வேலியமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மூடாத நிலையில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் குறித்து சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்கள் புகாரளிக்கலாம்.
தரையின் மேற்பரப்பில் உள்ள மின்சார கேபிள்களை மூடவும் , தாழ்வான மின் கம்பிகளை அதிக உயரத்திற்கு மாற்றவும் மின்வாரியத்திற்கு உத்தவிடப்பட்டுள்ளது , சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து அதிக மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மெட்ரோ வாட்டருக்கான 356 பம்பிங் நிலையங்களும் ஜெனரேட்டர் மூலம் இயங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது. மழைநீரை அகற்றும் வகையில் சூப்பர் ஷக்கர் உட்பட 673 வாகனங்கள் தயாராக உள்ளது.83 கூடுதல் கழிவு நீர் உறிஞ்சும் லாரிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
ஊடகங்கள் பயமுறுத்தாமல்,பொறுப்புடன் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்க வைக்கும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார். அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். ஆகாயத்தாமரைகள் அகற்ற, அகற்ற அவை உருவாகிக் கொண்டே இருக்கும். தொடர்ந்து அகற்றி வருகிறோம். ஆண்டுதோறும் மழையளவு அதிகரித்து வருவதே மழைநீர் வடிகால் பணிகள் தாமதமாக காரணம் என்று கூறினார்.