spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கற்றுத் தந்த கழகம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கற்றுத் தந்த கழகம்!

-

- Advertisement -

தமிழச்சி தங்கபாண்டியன்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கற்றுத் தந்த கழகம்!

தமிழ்நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆராயும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. ஒரு அரசியல் கட்சி மட்டுமல்லாமல், சமூக இயக்கம், பண்பாட்டுப் புரட்சி, மொழி மீட்பு, இலக்கிய அலை, திரையுலகில் மாற்றம் எனப் பல்வேறு பரிமாணங்களில் இந்தக் கழகம் தன்னுடைய ஆழமான அடையாளத்தைப் பதித்திருக்கிறது. குறிப்பாக, இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பை மாற்றியமைக்கவும் அரசியல் உணர்வைச் சாமானிய மக்களுக்குக் கொண்டுசெல்லவும், கலையை அரசியலுடன் இணைக்கவும் தி.மு.க. ஆற்றிய பங்கு தமிழ்நாடு வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயம்.

we-r-hiring

தி.மு.கழகத்தித்தின் தோற்றமே வெறும் அரசியல் தேவையால் மட்டுமே உருவானது அல்ல; மாறாக, அது ஒரு சமூகப் புரட்சியின் நீட்சியாகும். முதற்கட்டத்தில் அது, மொழிப் போராட்டங்கள் மூலம் மக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றது. ‘இந்தி திணிப்பு’ எதிர்ப்புப் போராட்டம், தமிழர்களின் தன்னம்பிக்கையையும் பண்பாட்டு கலாசார அடையாளத்தையும் உறுதியாக்கியது. அக்காலகட்டத்தில், தி.மு.க. அரசியல் மேடையைத் தாண்டி,கலை,இலக்கியம், சினிமா ஆகிய துறைகளில் தனது சிந்தனைகளைப் பரப்பத் தொடங்கியது.

என் வாழ்க்கையின் பல்வேறு தளங்களில், கலை, இலக்கியம், சமூகச் செயல்பாடுகள் மற்றும் அரசியல் என அனைத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வெளிச்சம் போல் விளங்குகிறது. வீட்டில் கிடைத்த ஒழுக்கமும் சுற்றம் முழுவதும் ஒலித்த திராவிட இயக்கத்தின் குரலும், என்னை உருவாக்கின. இந்தச் சூழலில் நான் முதலில் உணர்ந்த ஒரு பெண்ணாகப் பேசுவதற்கான உரிமை. குடும்பம் கொடுத்த நம்பிக்கையோடு சேர்ந்து, தி.மு.க. மேடைகளில் ஒலித்த குரல்கள் என்னை சுயமாக சிந்திக்கவும், பயமின்றி உரைக்கவும் கற்றுக்கொடுத்தன.

திரைப்படங்கள் என் தலைமுறைக்கு வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது ஒரு பாடசாலை. முத்தமிழறிஞர் கலைஞரின் வசனங்கள், பேரறிஞர் அண்ணாவின் கதைகள் எனப் பலவும் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தன. மேடைப்பேச்சை ஒரு தனிக் கலையாக அரசியல் தலைவர்கள் உருவாக்கி வைத்திருந்த காலம் அது. நீண்ட வசனம் பேசும் கதாபாத்திரத்தின் உடல் மொழி சைகைகள் ஒரு மேடைப்பேச்சாளருடையது போலவே அமைந்திருந்தது. வாய்ப்பேச்சிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், கேமராவின் அசைவைக் கட்டிப்போட்டது. திரைப்படம் ஏறக்குறைய ஒரு இலக்கிய வடிவமாகப் பார்க்கப்பட்டது.

சொல்லப்போனால் இந்தப் படங்களின் வசனங்கள் புத்தக வடிவில் அச்சிடப்பட்டு வெளியாகி, நன்கு விற்பனை ஆயின. அதனால்தான், படங்களில் பாடல்களை எழுதும் வாய்ப்பு வந்தபோது, அவை இயல்பாக எனக்குக் கை வந்தது. கலை என்பது சமூகத்திற்கான சேவை. அது மக்களை மகிழ்விக்க வேண்டும். ஆனால், அதற்கும் மேலாக மாற்றத்திற்கான சக்தியையும் தாங்கி வர வேண்டும். கவிதை எனக்கு வெளிச்சமாக இருந்தது. என் முதல் தொகுப்பு ‘எஞ்சோட்டுப் பெண்’ என்னை நானே கண்டடைந்த தருணம் அது. பின்னர் \வனப்பேச்சி’, ‘மஞ்சணத்தி’ போன்ற படைப்புகள் வெளிவந்தன. அவற்றில் காணக்கிடைக்கும் எளியவர்கள், என் கரிசல் மண்ணையும் மக்களையும் கொண்டாடும் எழுத்து என அனைத்திற்கும் வித்து திராவிட இயக்கமே.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கற்றுத் தந்த கழகம்!

என்னைப் போல எண்ணற்றவர்களைக் குறிப்பாகப் பெண்களை, உருவாக்கிய இயக்கம் இது. அந்த உண்மையை நினைத்தாலே என் மனம் பெருமையுடன் நிரம்புகிறது. இன்று நான் கவிஞராகவும் எழுத்தாளராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறேன் என்பதில், அதன் பங்கு மறுக்க முடியாதது.

அடுக்குமொழியில், எழுவாய், பயனிலைகளைப் புரட்டிப் போட்டு, அலங்காரங்கள் மிகுந்த அணி இலக்கணத்தோடு மேடையில் பேசும் புதிய பாணியைப் பேரறிஞர் அண்ணா துவங்கிவைத்தார். அதேபோல பேரறிஞர் அண்ணாவின் காலத்தில் ஒலிபெருக்கி வந்திருந்தது. பேரறிஞர் அண்ணா அதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, மக்களை ஈர்த்தார். மேடைப்பேச்சில் தனக்கென ஒரு தனித்த பாணியை முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்துக்கொண்டார்.

‘இதயத்தைத் தந்திடு அண்ணா..’ என அவர் தீட்டிய கவிதைமொழிப் பேச்சு என்னைப்போல் பலரின் நாவில் நடமாடியது. நான் இளம் வயதில் கூட்டங்களில் பங்கேற்றபோது, ஒரு பெரிய கூட்டத்தில் தலைவரின் சொற்கள் ஆயிரக்கணக்கானோரின் நெஞ்சங்களில் அதிர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். அச்சமின்றிக் குரல்கொடுக்கும் அந்தத் தருணங்கள், என்னுள் விதைக்கப்பட்டன.

முக்கியமாக, மதம் எப்படி இருக்கிறது என்பதைவிட, எப்படி இருக்க. வேண்டும் என்பதே முக்கியம் என்கிற பார்வையைத் தி.மு.க. தலைமை 1950-களில் இருந்தே முன்னெடுத்துச் சென்றது. 1950-களின் ஆரம்பத்தில் ஒரு மேடைப்பேச்சில் பேரறிஞர் அண்ணா இப்படிக் குறித்தார், “அன்பை மட்டுமே கோரும் ஒரு இறைவனே நமக்கு வேண்டும். தங்களுக்குக் கோபுரங்களைக் கேட்கும், அர்ச்சகர்கள் இடைத்தரகர்களாகச் செயல்படக் கேட்கும், மனைவி, ஆசை நாயகிகள், ஆடம்பர நகைகள், விழாக்கள் கோரும் சுடவுள்கள் செய்யச் சொல்வதைச் செய்ய முடியாதென மறுக்கிறோம்.

ஒருவேளை கடவுளால் மக்களிடம் நேரடியாகப் பேச முடியும் என்றால், ‘நீ அடி முட்டாளப்பா. நான் உலகைப் படைத்தேன். இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சரி, தவறு எனப் பகுத்தறியும் அறிவையும் உனக்குக் கொடுத்தேன். எனக்கு வேண்டியதெல்லாம் ஏழைகள், கடைக்கோடி மக்களின் அன்பு மட்டுமே. அவர்களின் வாழ்க்கையை மாற்ற உழை.” இது எனக்குள் மிகப் பெரும் புரிதலை விதைத்த கூற்று!

பேரறிஞர் அண்ணாவின் உரைகள், திரைப்படக் கதைகள், மேடை நாடகங்கள் ஆகியவை, அரசியலை மக்களுக்கு எளிதாகப் புரியும்படி கொண்டுசென்றன. இதனால், தி.மு.க. வெறும் கட்சியாக இல்லாமல், மக்களின் வீடுகளில் ஊடுருவிய ஒரு பண்பாட்டு சக்தியாகவும் மாறியது. 1967ஆம் ஆண்டு, தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தபோது, அது சாதாரண அரசியல் வெற்றியாகக் கருதப்படவில்லை. மாறாக, அது தமிழர் சமூக வரலாற்றில் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியது. கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, பெண்கள் உரிமைகள் ஆகிய அனைத்திலும் மக்கள் பக்கம் நிற்கும் அரசியலை தி.மு.க. நடைமுறைப்படுத்தியது.

முத்தமிழறிஞர் கலைஞரின் படைப்புகள், நாடகங்கள், சிறுகதைகள் என அனைத்தும் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கல்வி, மகளிர் உரிமை போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டவை. அரசகுமாரி, ‘நீதி தேவதை போன்ற நாடகங்கள், மேடைகளில் மக்களின் கவனத்தை ஈர்த்தது போல என்னையும் ஈர்த்தன. அவர் சிறுகதைகளில் நையாண்டி, நகைச்சுவை, சமூக விமர்சனம் என்று மனித மனஉளவியலை ஆழமாகப் புரிந்துகொள்ளும் அவரது திறன், கதாபாத்திரங்களின் உருவாக்கத்தில் தெளிவாக வெளிப்பட்டது.

சமயங்கள் வளர்த்த தமிழ் பேசாத பல பகுத்தறிவு சார்ந்த கருத்துகளையும், திராவிடம் வளர்த்த தமிழ் உரையாக வெளிப்படுத்தியது. திராவிட இயக்கத்தினர் தமிழையும் வளர்த்ததோடு தாமும் வளர்ந்தனர்; தம் வாழ்க்கையில் பெற்ற இன்பத்தை இவ்வையகம் முழுவதுக்கும் பகிர்ந்தனர். தமிழ்ச் சமூக வரலாற்றில் பல இயக்கங்கள் தோன்றியுள்ளன; சில விரைவில் மறைந்தாலும், சில வளர்ச்சியடைந்தும் வளராதும் போயிற்று. அதற்கிடையில், திராவிட இயக்கம் பேச்சிலும் எழுத்திலும், பொதுமக்களிடையிலும் தமிழைக் கொண்டுசென்று சமூகத்தைத் தொடர்பு படுத்தியது. முத்தமிழையும் தாண்டி, மொத்தத் தமிழையும் அதோடு சார்ந்த துறைகளையும் இயக்கம் எடுத்தாண்டது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கற்றுத் தந்த கழகம்!

திராவிட இயக்க நாடகங்கள் என்ற கட்டுரையில் வெளி.ரங்கராஜன் பின்வரும் சில கருத்துகளை முன்வைக்கிறார், ‘நாடகங்களைத் தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், சக மனிதனின் பிரச்சினைகளைப் பேசும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள்’. பேரறிஞர் அண்ணாவைப் பின்பற்றி முத்தமிழறிஞர் கலைஞர், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, சி.பி.சிற்றரசு போன்ற பல நாடக எழுத்தாளர்கள் உருவாயினர். பேரறிஞர் அண்ணாவிடம் ஒருவிதமான பல்நோக்கு பார்வை இருந்தது. இரு வேறுபட்ட இலக்குகள் இருந்தன. லெனினைக் கொலை செய்ய நிலவிய சதி பற்றி ‘துரோகி கப்லான்’ என்ற நாடகத்தை அவர் எழுதினார்.

மிக திட்டமானதும் கூர்மையானதும் அந்த நாடகம். சுய சிந்தனையைக் கூண்டில் நிறுத்தி எதிரிகள் வழக்காடுவதாக ‘ஜனநாயக சர்வாதிகாரி’ என்ற நாடகத்தை எழுதினார். இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை காங்கிரஸ் அனுமதிப்பதாக உருவக பாணியில், ‘சகவாச தோசம்’ என்ற நாடகத்தை எழுதினார்.

என்.எஸ். கிருஷ்ணன் நயமான நகைச்சுவைமூலம் சமூக விமர்சனக் கருத்துகளை வழங்கினார். காந்தியத்தையும் பகுத்தறிவையும் இணைத்த ஒரு போக்கை அவர் நாடகங்களில் காணலாம்; ‘நல்லதம்பி’ இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. வேதம், புராணம், பக்தி என்ற பிராமணக் கலாச்சாரத்திற்கு மாற்றாக எளிமை, மனிதாபிமானம், சமத்துவம் கொண்ட புதிய தமிழ்க் கலாச்சாரத்திற்கு, மக்கள் கலாச்சாரத்திற்கு, என்.எஸ். கிருஷ்ணன் ஆதாரமாக இருந்தார்.

எம்.ஆர்.ராதா உருவகப்படுத்திய கலகப் பண்பாடு, திராவிட இயக்கத்தின் இன்னொரு முக்கியமான போக்கு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நாடக மேடைக்கு புதிய அழுத்தத்தை உருவாக்கியவர். தமிழில் முதன்முதலில் தடை செய்யப்பட்ட நாடகங்களும் அவரது படைப்புகள்தான். ராமாயணப் பாத்திரங்களைக் கேலி செய்த ‘கீமாயணம்’ நாடகம் தடை செய்யப்பட்டாலும், தடையை மீறி திருச்சி தேவர் ஹாலில் நிகழ்த்தினார்.

நாடக மேடையில் பரிசுத்த நாயகர்களைக் காட்டி, ‘ரத்தக் கண்ணீர்’ போன்ற நாடகங்களை உருவாக்கினார். இவ்வாறு, சமூக மாற்றம், தந்தை பெரியார் கருத்துகளை நாடக வடிவில் வெளிப்படுத்தும் முயற்சியில், திராவிட இயக்க நாடகங்கள் பெரிய மதிப்பைப் பெற்றன. ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனின் கலை அம்சத்தையும் எம்.ஆர்.ராதாவின் கலகப் பண்பாட்டையும், இவை அனைத்தும் கலந்த முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பின்பு பலர் உருவாகாதது நமக்கு பெரிய இழப்பு. ஒரு நாடகக்காரியாக, தமிழ் நாடக அரங்கில் பங்கேற்பவளாக நான் பயணிப்பதற்கான அடித்தளம் இவையே.

தி.மு.க.வின் அரசியல் நடவடிக்கைகள், சாதி சார்ந்த வட்டார வழக்குகளை அரசியல் மேடைகளில் அப்புறப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தன. அனைவரையும் மரியாதையுடன் பெயரைக் குறிப்பிடுதல், சால்வை மற்றும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தல், இத்தகைய நடைமுறைகளில் இடம்பெற்றன. இதுவே அரசியல் பேச்சில் மரபுச் செந்தமிழின் உச்சியைக் காட்டியது. திராவிட இயக்கத்தின் மேடைப்பேச்சில் சிலர் செம்மையான நடையிலிருந்து விலகி, புதிய மொழி நடையைப் பின்பற்றியது பெரும் வரவேற்பைப் பெற்றது!

செந்தமிழ் நடையைப் பின்பற்றாதவர்கள்கூட, மக்களிடையே வரவேற்பு பெற்றனர். பொதுக் குழுக்களில் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய அடுக்குமொழிப் பேச்சு, பி.பாலசுப்பிரமணியத்தின் மூலம் மேடைப் பேச்சு வரை சென்றது. 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில், பி.பாலசுப்பிரமணியம் நடத்திய ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகை, 1940ல் தந்தை பெரியார். முகம்மது அலி ஜின்னா, அண்ணல் அம்பேத்கர் பங்குபெற்ற வட்ட மேசை மாநாட்டின் உரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது, இவருடைய பெரும் பங்களிப்பு. 1944ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள், மதராஸ் கன்னிமரா ஹோட்டலில் டாக்டர் அம்பேத்கர் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்தவர் பி.பாலசுப்பிரமணியம். ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகை அலுவலகம் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களின் ஆலோசனை மையமாகவும் இருந்தது. இவற்றிலிருந்தெல்லாம் தி.மு.க. உரம் பெற்று உயரங்களைத் தொட்டது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கற்றுத் தந்த கழகம்!

1942ல் முத்தமிழறிஞர் கலைஞர் ‘முரசொலி’ இதழைத் தொடங்கினார். அவரது தனிப்பட்ட உரைநடை, எதுகை, மோனை, நேரடி உரையாடல் பாணி இதழுக்கு தனித்துவம் வழங்கியது. தந்தை பெரியார் ஆண்டை அறிமுகப்படுத்தியபோல, திருவள்ளுவர் ஆண்டையும் ‘முரசொலி’ அறிமுகப்படுத்தியது. தலையங்கங்கள் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தன. இதழில் நாட்டுச் செய்திகள், நாவல்கள் மற்றும் புதையல் கதைகளும் இடம்பெற்றன. முரசொலியில் பயிற்சி பெற்ற எழுத்தாளர்கள் திரு நாஞ்சில் மனோகரன், அய்யா திரு முரசொலி மாறன், பெரியப்பா சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு, பா.செயப்பிரகாசம், பி.சி.கணேசன், கே.சொர்ணம், அமிர்தம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

1948ல் தோன்றிய ‘புதுவாழ்வு’ இதழை, பேராசிரியர் நடத்தினார். பத்து மாதங்கள் மட்டுமே வெளிவந்த இவ்விதழ், திராவிடக் கொள்கைகளை விளக்கும் தலையங்கங்களைக் கொண்டது. இந்தி எதிர்ப்பு, மொழியுணர்வு, பழந்தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துதல், இயக்கப் பணிகளில் வழிகாட்டல் போன்ற கருத்துகள் இதழில் இடம்பெற்றன. இதழின் எழுத்து எளிமையானது, உணர்ச்சிமிக்கதும், வாசக மனதில் செய்தியைப் பதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது – இவைகளின் அறிமுகம் அனைத்தும் என் அப்பா வே.தங்கபாண்டியனின் மூலமாக எனக்குக் கிடைத்தது.

1969ல் பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்றார், தலைவர் கலைஞர். அந்தச் சமயத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ‘பாக்கிய லட்சுமி’, ‘சௌபாக்கியம்’, ‘மேழிச் செல்வம்’. ‘இன்காம்’. ‘ஆரோக்கிய மார்க்கம்’, ‘மெட்ராஸ் ஹெல்த் எஜுகேஷன்’ மற்றும் ‘சீரணி (கிராம நலம்)’ என ஏழு பருவ இதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தன. அவற்றை ஒருங்கிணைத்து 1970 ஜூலை 1ஆம் தேதி, ‘தமிழரசு’ என்ற பெயரில் மாதம் இருமுறை இதழ் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறுவியது. இன்று நாட்டில், இதர மாநிலங்கள் சிலவற்றில் வெளியாகும் மாநில அரசு இதழ்களுக்கு எல்லாம் ‘தமிழரசு’ முன்னோடியாக இருந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. நான் இளவயதில் தவறாது படித்த பத்திரிகை அது. பத்திரிகைகள் அரசியல் குரலாக மட்டுமல்லாது, இலக்கிய மற்றும் சமூக விமர்சனங்களுக்கான தளமாகவும் இருந்தன. இவை அனைத்தும் தமிழகத்தின் பொது வாழ்க்கையை மாற்றியமைத்தன.

அதேபோல, திரைப்படம் என்ற கலையுலகை அரசியல் கருவியாக தி.மு.க. மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது. கதாசிரியர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோரின் படைப்புகள் மக்கள் மனதில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தின. அந்தக் காலத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் சாதி, வறுமை, சமத்துவம், சமூக நீதியைப் பேசின. இதனால், கலைக்கூடம் ஒரு பொழுதுபோக்கு மையமாக மட்டுமல்லாது, அரசியல் கருத்துகளை விதைக்கும் வெளிக்கூடமாகவும் மாறியது.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் உருவாகின. ஆனால், அவற்றில் பெரும்பாலனவை ஆட்சிப் பொறுப்பை எவ்வாறு ஏற்க வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்ற வேண்டும், உலகளாவிய அரசியலில் இந்தியா எவ்வாறு தன்னுடைய குரலைப் பதிவுசெய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தின. ஆனால், தி.மு.க. மட்டுமே ஒரு வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்தது. அதன் அரசியல் அடிப்படை சமூக நீதி மற்றும் சுயமரியாதை. இதை மட்டுமின்றி, கலையும் அரசியலும் பிரிக்க முடியாதவை என்ற நிலைப்பாட்டை தி.மு.க. தலைவர்கள் எடுத்துக்கொண்டனர்.

அதனால்தான் தமிழ் இலக்கியம், பத்திரிகைத் துறை, மேடைப் பேச்சு, நாடகம், சினிமா, இசை என அனைத்து கலைப்பிரிவுகளிலும் தி.மு.க.வின் சுவடுகள் புலப்படும். தி.மு.க.வின் வரலாறு என்பது அரசியல் தேர்தல் வெற்றிகளின் வரலாறு மட்டும் அல்ல. அது சமூக முன்னேற்றத்தின், மொழி மீட்பின், பண்பாட்டு சுயநிலையின், மக்களுக்கான உரிமைப் போராட்டங்களின் வரலாறாகவும் திகழ்கிறது. பாரம்பரிய சமூக கட்டமைப்பில் நிலைத்திருந்த சாதி ஒடுக்குமுறையையும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இருந்த பின்தங்கிய நிலைகளையும் உடைத்தெறிந்து, புதிய சமூக ஒழுங்கை நிறுவ முயன்றது என் கழகம். இதற்கான வழிமுறையாகக் கலையையே அது கருவியாகக் கொண்டது!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கற்றுத் தந்த கழகம்!

எழுத்து, பேச்சு என்கிற இரண்டே இரண்டு ஆயுதங்களைக் கொண்டு புதிய இந்தியாவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை தயார்செய்த இயக்கம்தான் தி.மு.க. இந்த இயக்கம், எனக்கு தனிப்பட்ட அடையாளத்தை மட்டுமல்ல, சமூக அடையாளத்தையும் கொடுத்தது. என் சொற்களிலும், என் உரைகளிலும், என் செயல்பாடுகளிலும், இந்த இயக்கத்தின் குரல் எப்போதும் ஒலிக்கிறது. நான் இன்று அரசியல் மேடையில் பேசும் பொழுது அல்லது இலக்கிய உலகில் பங்களிக்கும்போது, இந்த இயக்கத்தின் பாரம்பரியத்தோடு இணைந்து செயல்படுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம், என்னை மட்டுமல்ல என்னைப்போல எண்ணற்ற இளைஞர்களை, யுவதிகளை உருவாக்கிய இயக்கம். இந்த உண்மையை நினைக்கும்போதெல்லாம். என் மனம் நன்றியுடனும் பெருமையுடனும் நிரம்புகிறது. தமிழகத்தின் சரியான எதிர்காலத்துக்கான கருவி திராவிடம்தான்! அதனை அயராமல் முன்னெடுத்துச் செல்லும் படைக்கலன் எங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – வெற்றி, தோல்விகளுக்கு அப்பால்…

MUST READ