காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அயப்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரவாயில் எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஊராட்சியின் வரவு செலவுகள், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட மக்கள் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூடடத்தில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி, அயபாக்கம் ஊராட்சி மக்கள் தொகையில் நகராட்சிக்கு இணையான மக்கள் அதிகம் வாழும் இடமாக உள்ளதாகவும், எனவே ஆவடி மாநகராட்சியில் அயப்பாக்கம் ஊராட்சியை இணைப்பதற்கு பகுதி மக்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. வளர்ச்சிக்கும் பணிகளுக்கும் அது உகந்ததாக இருக்காது என்றும், தனி நகராட்சியாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கரஒலியை எழுப்பி ஆதரவு அளித்தனர். இதனை அடுத்து, அயபாக்கம் தனி நகராட்சியாக மாற்ற வேண்டும் என தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, இன்னும் ஒரு சில மாதங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதாகவும், ஆனால் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவது தள்ளிப்போகும் எனவும் தெரிவித்தார். இதனால் யாரும் வருத்தமடைய வேண்டாம் என்றும், பதவி இருந்தாலும் இல்லையென்றாலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களுக்கு பணியாற்றி வருவார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் மதுரவாயல் தொகுதியில் உள்ள வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம் போன்ற ஊராட்சிகளை ஆவடி மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், ஆனால் அயப்பாக்கம் ஊராட்சியை பொறுத்தவரை தனி நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதன் மீது அரசு அதிகாரிகள் பரிசிலனை செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக கிராமசபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வன்முறைகள் ஈடுபட மாட்டோம் எனவும், குழந்தைகளை பாதுகாப்போம் என்பன உள்ளிட்ட உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.