ஈரோட்டில், கை கால் வலி குணமாகவும், கண் திருஷ்டி போக்கவும் பரிகாரம் செய்வதாக கூறி, பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வயதான தம்பதியிடம் நகை மற்றும் பணம் பறித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்..ஈரோடு விவிசிஆர் நகரைச் சேர்ந்த 72 வயதான சண்முகம், இவரது மனைவி செல்வி. இவர்களின் மகன் மற்றும் மகள் திருமணம் ஆகி சென்ற நிலையில் தம்பதியினர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சொந்தமான வீடுகளில் வாடகைக்கு பலரை குடி அமர்த்தி உள்ளனர்.
வயதான தம்பதிக்கு அடிக்கடி கை கால் வலி இருந்து வந்துள்ளது இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கண் திருஷ்டி போக்குவதற்காக பரிகார பூஜை செய்வதாக இவர்களது வீட்டில் குடியிருந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். இதனை நம்பி பரிகார பூஜைக்கு வயதான தம்பதியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
வீட்டில் தம்பதியினர் தனியாக இருந்தபோது அங்கு வந்த நபர் பரிகார பூஜைகள் செய்வதாக கூறியுள்ளார். பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பாலை குடிக்க வேண்டும் என கூறி இருவருக்கும் பாலை அருந்த கொடுத்துள்ளார். இதனை அருந்திய சிறிது நேரத்தில் தம்பதியினர் மயக்கம் அடைந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செல்வி அணிந்திருந்த கம்மல் வளையல் தாலிக்கொடி உள்ளிட்ட ஒன்பது சவரன் நகை மற்றும் பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு பரிகார பூஜை செய்ய வந்த நபர் தலைமறைவானார். இந்நிலையில் அடுத்த நாள் செல்வி மயக்கம் தெளிந்து கண் விழித்துள்ளார்.
அப்பொழுதுதான் பரிகார பூஜை செய்வதாக கூறி பணம் நகை கொள்ளை போனது தெரிய வந்தது. மேலும் தொடர்ச்சியாக தனது கணவர் சண்முகம் மயக்க நிலையிலேயே இருக்கிறார் என்பதை பார்த்து உடனடியாக தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து சண்முகத்தை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து செல்வி ஈரோடு நகர காவல் துறையில் புகார் அளித்தார் இதன் பேரில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் மந்திரவாதி போல் நடித்து நகை பணம் கொள்ளை அடித்துச் சென்ற நபர் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து எட்டு சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கைதான பெருமாள் ஏற்கனவே கருங்கல்பாளையத்தில் சிறுமியை கடத்திச் சென்று கம்மல் பறித்த வழக்கில் கருங்கல்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பெருமாள் சில தினங்களிலேயே மீண்டும் இதுபோல் கைவரிசை காட்டி சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..