ஆந்திர மாநிலத்தில் தனியார் அறக்கட்டளை விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் கைலாசபட்டணம் பகுதியில் ஆராதனா அறக்கட்டளை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்கியிருந்தனர். இந்த நிலையில கடந்த சனிக்கிழமை அன்று விடுதியில் பிரியாணி மற்றும் சாம்பார் சாதம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விடுதி நிர்வாகிகள் மாணவர்களை அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் அனகாப்பள்ளி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிக்கி பலனின்றி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து அனகாப்பள்ளி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,. முதற்கட்ட விசாரணையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் மாணவர்கள் இறந்தது தெரியவந்துள்ளது.