அருகம்புல் ஜூஸின் நன்மைகள்.
அருகம்புல் ஜூஸ் என்பது நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது ரத்த சோகை, சிறுநீரக கற்கள், சர்க்கரை நோய், மாதவிடாய் கோளாறு, கல்லீரல் பிரச்சனை, சரும பிரச்சனை ஆகியவற்றை குணப்படுத்தும்.

முதலில் அருகம்புல் ஜூஸ் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.
ஐந்து முதல் ஆறு இலைத்தண்டு அருகம்புல், ஒரு கப் தண்ணீர், அரை ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அருகம்புல்லை நன்கு கழுவி தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம் அல்லது எதுவும் சேர்க்காமலும் குடிக்கலாம். ஆனால் பெரியவர்கள் இதனை சுமார் 30ml முதல் 50ml வரை குடிக்கலாம். குழந்தைகளுக்கு இரண்டு ஸ்பூன்களுக்கு மேல் கொடுக்கக் கூடாது.
அருகம்புல் ஜூஸின் பயன்கள்:
அருகம்புல் என்பது ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும். மேலும் ரத்த சோகையை தடுக்கும். இது ரத்த ஓட்டத்தை சீராக்கி உடல் சோர்வை குறைக்கும்.
அருகம்புல் ஜூஸ் சிறுநீரை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதோடு சிறுநீரில் எரிச்சல் உண்டாவதையும் குணப்படுத்தும்.
அடுத்தது இது உடல் சூட்டை தணிக்கும். அருகம்புல் ஜூஸ் எடுத்துக் கொள்வதால் வாய்ப்புண் குணமாகும். அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் உடல் சூட்டை சமப்படுத்த உதவும்.
குறிப்பாக அருகம்புல் ஜூஸ், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். (இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது)
இது தவிர இது கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்த உதவுகிறது.
அருகம்புல் ஜூஸில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும்.
முடி உதிர்வு, பொடுகு, புண் ஆகியவற்றை குணப்படுத்துவதோடு முகத்தை பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
குறிப்பு:
பெரும்பாலும் காலை வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் புதிய அருகம்புல்களை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்ளக் கூடாது.
மேலும் ஜூஸ் தயாரிக்கும் போது அருகம்புல்லில் புழுக்கள், தூசி இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
இது தவிர ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு பின்னர் இந்த அருகம்புல் ஜூஸ் எடுத்துக் கொள்வது நல்லது.


