பாகுபலி வேடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு அப்போது அவர் அமைச்சராக இருந்தபோது அவரின் பிறந்த நாளில் கோவையின் பல பகுதிகளில் பாகுபலி வேடத்தில் எஸ். பி. வேலுமணி இருப்பது போன்று அதிமுகவினர் கட் அவுட் வைத்து பரபரப்பு ஏற்படுத்தி இருந்தனர். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்காக அவர் பாகுபலி வேடத்தில் இருப்பது போன்று கோவையில் கட் அவுட் வைத்துள்ளனர்.
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் பன்னீர்செல்வம் – பழனிச்சாமி இருவருக்கும் இடையேயான மோதல் இன்னும் நீடித்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் அறிவிக்க கோரி பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்த சட்டப் போராட்டங்களில் பழனிச்சாமி அணியினர் வென்று உள்ளனர். இதை அடுத்து அதிமுகவில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதை கொண்டாடும் விதத்தில் கோவை மாவட்டத்தில் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர் பழனிச்சாமிக்கு பாகுபலி வேடத்தில் கையில் வாளுடன் நிற்பது போன்று கட் அவுட் அமைத்துள்ளனர். ’தமிழக மக்களின் பாகுபலியே.. கழகப் பொதுச் செயலாளரே.. தங்களை வாழ்த்தி வணங்குகிறோம் ..’என்று அந்த கட் அவுட்டில் வாசகங்கள் அச்சடித்துள்ளனர்.
பாகுபலி வேடத்தில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி இருக்கும் இந்த கட் அவுட் கோவை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது கோவை பகுதி அதிமுகவினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது.