வங்கதேசத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரை போட்டித்தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததால் பிரதமர் பதவி விலகிய நிலையில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு டி20 உலகக் கோப்பை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, வங்கதேசத்தில் பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் 7 வாரங்களில் தொடங்க உள்ள நிலையில் வங்கதேசத்தில் வன்முறை குறைந்து இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே அங்கு டி20 உலகக் கோப்பை நடத்தப்படும் என கூறப்படுகிறது. அதேவேளையில் வன்முறை நீடித்தால், டி20 உலகக் கோப்பைத் தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.