Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு - நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் ஒப்புதல்..

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு – நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் ஒப்புதல்..

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இச்சமபவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள்

அப்போது அவர்கள், விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். விஷச் சாராய விற்பனை உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்காது என்பதால், அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் முனியப்பராஜ், விஷ சாராய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தனர்.

MUST READ