புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கராத்தே மாஸ்டர் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹூசைனி உடல் இன்று மாலை 4.30 மணிக்கு ராயப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
கராத்தே மாஸ்டரும், வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி தனக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹூசைனி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் மருத்துவக்கல்லூரிக்கு தானமான வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் அவரது உடல் உறுப்புகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால், அவரது உடல் தானமாக வழங்க முடியாதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், ராயப்பேட்டையில் உள்ள அமருன்னிசா அடக்க மைதானத்தில் ஹூசைனி உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் பேட்டியளித்த வில்வித்தை வீராங்கனை காம்னா, மதுரையில் ஷிஹான் பெயரில் ஒரு மியூசியம் வைக்க வேண்டும். அதில் அவர் வடிவமைத்த ஹு புத்தா சிலையை வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அவருடைய உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் சேதமடைந்து உள்ளதால் தற்போது உடல் உறுப்பு தானம் செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். அவருடைய நீண்ட நாள் ஆசை அவர் போன்று இருக்கக்கூடிய சிலையில் அவருடைய இதயத்தை வைக்க வேண்டும் என்பதுதான். ஆனால் தற்போது உறுப்புகள் சேதம் அடைந்ததால், அது போன்று இதயத்தை வைக்க முடியாது. தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஷிஹான் வடிவமைத்த சிலைகளை மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைகளில் வைப்பதற்கு அனுமதி தர வேண்டும்.
அஞ்சலி செலுத்திய கலா மாஸ்டர் அளித்த பேட்டியில், ”நான் நடன பயிற்சி மையத்தை ஆரம்பிக்கும் போது என்னுடைய கஷ்ட காலத்தில் உடன் இருந்த முதல் மாணவன். ஹுசைனியின் பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவர்கள் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். இது உசேனியின் கடைசி ஆசை என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஹூசைனியின் மரணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனை தாழ்மையாக கேட்பதாக நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஹூசைனியின் மறைவு, இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு- அண்ணாமலை