Homeசெய்திகள்தமிழ்நாடுகும்கி யானைகள் உதவியுடன் பிடிப்பட்டது PM2 மக்னா யானை - வனத்துறையினர்

கும்கி யானைகள் உதவியுடன் பிடிப்பட்டது PM2 மக்னா யானை – வனத்துறையினர்

-

கூடலூர் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி மூதாட்டியை அடித்துக் கொன்ற PM2 மக்னா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட யானையை விரைவில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் விடுவதற்கான பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பரை, வாழவயல், தேவாலா உள்ளிட்ட கிராமங்களில் PM2 என்ற சுமார் 15 வயது மதிக்கதக்க மக்னா யானை ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித்திரிந்து வந்தது. பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடுவதும், இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று சுவற்றை உடைத்து வீட்டிற்குள் இருக்கும் உணவு பொருட்களை எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதுவரை இந்த யானை 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி உள்ள நிலையில் கடந்த மாதம் வாழ வயல் பகுதியில் பாப்பாத்தி(52) என்பவரின் வீட்டை சேதப்படுத்தி அவரையும் தாக்கிக் கொன்றது.

இதனை அடுத்து அந்த யானையை பிடிக்குமாறு தேவாலப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அந்த யானையை பிடித்து முதுமலை வனப்பகுதிக்குள் விட தமிழக வனத்துறை அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 18 நாட்களாக இந்த யானை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்தனர். ஆனால் பிடிபடாமல் போக்கு காட்டி வந்தது.

இந்த நிலையில் அந்த யானையை பிடிக்க முதுமலையிலிருந்து கும்கி யானைகளான விஜய், வசீம், சுஜய் மற்றும் கிருஷ்ணா ஆகிய நான்கு கும்கி யானைகளும் களத்தில் இறக்கி விடப்பட்டன. மேலும் டாப்சிலிப் வனக்கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் முதுமலை வனக்கால்நடை மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் டிசம்பர் 8 தேதி மதியம் மக்னா யானை புளியம்பரை அருகே உள்ள நீடில் ராக் வனப்பகுதியில் வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.

தற்போது அந்த யானை கும்கி யானைகளின் உதவியுடன் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிடிபட்ட மக்னா யானையை லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகம் என்கிற அடர்ந்த வனப் பகுதியில் விடுவதற்கான பணியில் கூடலூர் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த யானை பிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து புளியம்பரை பகுதி கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

MUST READ