எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை காங்கிரஸ் கட்சி பணிமனையில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பே.சாமிநாதன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், “ஏற்கனவே எதிர்பார்த்த வெற்றி தான், நாங்கள் எதிர்பார்த்ததை விட வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் ஆட்சியின் சாதனைகளை தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அந்த அடிப்படையில் முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களின் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்து விட்டது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என, ஆனால் இன்று அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னேற்றமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். முதலமைச்சரின் நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக நாங்கள் இதை எடுத்துக் கொள்கிறோம்” எனக் கூறினார்.