முதுபெரும் தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
எளிய தமிழில் திருக்குறள் உரை தந்த பெருமகன்
பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்து சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முதுபெரும் தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

எளிய மக்களும் எளிதாக அறிந்துகொள்ளும் வண்ணம், தமிழ்மறையாம் திருக்குறளுக்கு எளிய தமிழில் தெளிவுரை எழுதிய ஐயாவின் தமிழ்த்தொண்டு தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும். சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.”
தமிழ்த்தொண்டு என்றும் நிலைபெறும்
மேலும், பட்டிமன்றக் கலையின் மூலம் தமிழை உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா என்றும், இலக்கியச் செழுமைமிக்கத் தமிழைக் பாமர மக்களும் சுவைக்கும் வகையில் கொண்டு சேர்த்த அவரது பணி காலத்தால் அழியாதது என்றும் தனது அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளார். சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகச் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: மார்க்சிஸ்ட் & இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரங்கல்!
