திமுகவின் தேசிய ஊடகச் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான மனுராஜ் சண்முகசுந்தரம் எழுதிய ‘The People’s Sanctum – The 100 Years Struggle to Democratize Temple in India’ (மக்கள் கருவறை – இந்தியாவில் கோயில்களை மக்களாக்குவதற்கான நூறாண்டு காலப் போராட்டம்) எனும் நூலின் வெளியீட்டு விழா சென்னை விக்டோரியா ஹாலில் கோலாகலமாக நடைபெற்றது.


விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்பு உரையாற்றினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநிலப் பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வரலாற்று ஆவணம் – நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பாராட்டு
விழாவில் நூலை வெளியிட்டுப் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், இந்நிகழ்வை வெறும் சாதாரண நூல் வெளியீட்டு விழாவாகப் பார்க்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். இது நமது சமுதாயம் கடந்து வந்த கரடுமுரடான பாதையைச் சுட்டிக்காட்டும் வரலாற்று ஆவணம் என்று அவர் வர்ணித்தார்.
நூலாசிரியர் மனுராஜைப் பாராட்டிப் பேசிய அவர், “சமூகத்தில் சாதி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடக்கூடிய பெரும் கடமை நூலாசிரியரின் பெயரிலேயே உள்ளது. இத்தகைய ஆழமான சிந்தனைகளைக் கொண்ட நூலை எழுதிய அவரைப் பெற்றெடுத்த பெற்றோரை நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. சமீபத்தில் நான் படித்து வியந்த புத்தகம் மனுராஜின் புத்தகம்தான்” என்றார்.
வழிபாட்டு உரிமை அடிப்படை உரிமை
தொடர்ந்து பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்ற மாபெரும் தலைவர்களின் வரலாற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்:
“சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமூகத்தில் மலரச் செய்வதற்கு வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கோயில்களில் அனைத்துத் தரப்பினரின் நுழைவு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதை இந்த நூல் ஆணித்தரமாகச் சொல்கிறது.”
“ஒரு மனிதனைப் பிறப்பால் அவன் கோயிலுக்குள் செல்ல வேண்டும் அல்லது செல்லக்கூடாது என்று தீர்மானிப்பது, அவனது அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும். வழிபாட்டு உரிமை என்பது மதச் சலுகை அல்ல; அது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை.”
“இன்று எந்தவொரு தகுதியும் பெற்றுப் பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்ற நிலை நம் சமூகத்தில் நாட்டப்பட்டுள்ளது.”
“இருண்ட காலத்திலிருந்து சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களின் காரணமாக நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறோம் என்பதை உணர்த்தும் வரலாற்று ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. நாம் கடந்த வந்த போராட்டங்களை இந்தத் தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்களும் நூலின் முக்கியத்துவம் குறித்தும், சமூக சீர்திருத்த வரலாற்றின் தேவைகள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். விழா அரங்கில் திரளான பொதுமக்களும் வழக்கறிஞர்களும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
