ஆஸ்கர் நாயகன் கீரவாணி புதிய பாலிவுட் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் கீரவாணி. இவர் மரகதமணி என்ற பெயரில் சில தமிழ் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ராஜமவுலியின் பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் க்ளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்று உலகளவில் கவனம் பெற்றது. இந்நிலையில் தற்போது கீரவாணி மீது இந்திய அளவில் கவனம் குவியத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் கீரவாணி பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிக்கும் ‘ஆரோன் மேன் கஹான் தும் தா’ என்ற படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தை நீரஜ் பாண்டே இயக்குகிறார்.
“2000-ல் இருந்து 2002 வரை இந்தி சினிமாவில் பிசியாக இசையமைத்துக் கொண்டிருந்தேன். சில பாடல்கள் மிகவும் பிரபலமாகி இருக்கின்றன. தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால், பாலிவுட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது நல்ல வாய்ப்புகள் எங்கிருந்து வந்தாலும் கண்டிப்பாக இசை அமைப்பேன். நீரஜ் பாண்டேவுடன் ஏற்கெனவே இணைந்து பணியாற்றி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.