Homeவிளையாட்டுIPL 202518-வது ஐபிஎல் சீசன்: தணியுமா கோலியின் கோப்பைக்கான தாகம்?

18-வது ஐபிஎல் சீசன்: தணியுமா கோலியின் கோப்பைக்கான தாகம்?

-

- Advertisement -

18-வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் அனைத்து தொடர்களிலும்  பங்கேற்ற வீரர்கள் என்ற சிறப்பை தோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட 9 வீரர்கள் பெற்றுள்ளனர். இந்த தொடரிலாவது கோலியின் கோப்பை கனவு நிறைவேறுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

18-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக மள்ளுக்கட்ட உள்ளனர். தொடரில் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடியும் பரிசுத்  தொகையாக வழங்கப்பட உள்ளது.

இந்த  தொடரில் குறிப்பிடத்தக்க விதமாக பல அணிகள் புதிய கேப்டன்களின் தலைமையில் களம் காணுகின்றன. ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் ரஜத் பட்டிதார் தலைமை தாங்குகிறார். நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியின் கேப்டனாக அனுபவ வீரர் ரகானே உள்ளார். டெல்லி அணிக்கு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தலைமை வகிக்கிறார். கொல்கத்தாவுக்கு கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், இம்முறை  பஞ்சாப்-ஐ வழிநடத்துகிறார். அதிரடி வீரர் ரிஷப் பந்த், லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் சென்னை, மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான்  மற்றும் குஜராத் அணிகள் பழைய கேப்டன்களின் கீழ் 18வது ஐபிஎல் சீசனை எதிர்கொள்ள உள்ளன.

கடந்த 2008ஆம் தொடக்க ஐபிஎல் தொடரில் விளையாடிய 9 வீரர்கள், தற்போதைய 18வது சீசனிலும் விளையாட உள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, இஷாந்த் சர்மா, தோனி,  ரஹானே,  ரவீந்திர ஜடேஜா, மனீஷ்  பாண்டே, ஸ்வப்னில் சிங் ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளனர். இவர்களில் விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஸ்வனில் சிங் ஆகியோர் ஐபிஎல் கோப்பை எட்டாக்  கனியாகவே உள்ளது. தோனி, ரோகித்  ஆகியோர் 5 முறை கோப்பையை வென்று வெற்றிகரமானவர்களாக திகழ்கிறார்கள்.

தனது 18வது ஐபிஎல் தொடரில் விளையாடும் விராட் கோலி இம்முறையாவது கோப்பையை வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2011 ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று ஐசிசியின் அனைத்து கோப்பைகளை வென்ற அணியில் கோலி இடம்பெற்றிருந்தபோதும்,ஐபிஎல் எட்டாக்கனியாகவே உள்ளது. வழக்கமாக ஆர்சிபி ரசிகர்கள்  சொல்லும் ஈ சாலா கப்  நமதே என்கிற வார்த்தை கூட அவருக்கு அழுத்துவிட்டது என்றால் எத்தகைய தோல்வி மனநிலையில் உள்ளார் என்பதை புரிந்துகொள்ளலாம். ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ள பட்டிதாரும், கோலிக்காக  கோப்பையை வெல்வோம் என்று  நம்பிக்கை  தெரிவித்துள்ளார். பார்ப்போம் இம்முறை கிங் கோலி,மகுடம் சூடுவாரா? என்று.

MUST READ