Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் உருக்காலையை திட்டமிட்டு நஷ்டத்தில் இயக்குகின்றனர்- கே.எஸ்.அழகிரி

சேலம் உருக்காலையை திட்டமிட்டு நஷ்டத்தில் இயக்குகின்றனர்- கே.எஸ்.அழகிரி

-

சேலம் உருக்காலை திட்டத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படாமல் உள்ள 3,000 ஏக்கர் நிலத்தில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திராவுக்குச் செல்லவிருந்த இரும்பு உருக்கு ஆலையை அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் அழுத்தம் கொடுத்து சேலத்தில் தொடங்க காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதன்பின்னர் முதல்வராகப் பதவியேற்ற கருணாநிதியும் அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டினார். அவர் முதல்வராக இருந்தபோது, 1970 ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி சேலம் இரும்பு உருக்காலைக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பனை செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மத்திய இரும்பு எஃகு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பதற்கான ஏலம் தொடர்பான நடவடிக்கைகள் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அந்த ஆலைக்குச் சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்களைத் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் ஒரே நோக்கம் என்பது அவர்கள் காட்டும் அவசரத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. சேலம் இரும்பாலைக்குப் புத்துயிரூட்டுவதற்குப் பதிலாக அதை விற்பனை செய்ய மத்திய அரசு முயல்வது தமிழகத்துக்குச் செய்யும் அநீதியாகும். சேலம் உருக்காலை திட்டத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்தப்படாமல் உள்ள 3,000 ஏக்கர் நிலத்தில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதை பயன்படுத்த தயங்குவது ஏன் ?

சேலம் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 4,000 ஏக்கர் நிலங்களை, ஓர் ஏக்கர் ரூ.5,000-க்கும் குறைவான விலையில் கொடுத்ததால்தான் சேலம் இரும்பாலை உருவானது. இத்தகைய பின்னணி கொண்ட சேலம் இரும்பாலையை உலகத்தரம் கொண்ட ஆலையாகத் தரம் உயர்த்துவதுதான், அந்த ஆலை அமைவதற்காக தியாகம் செய்த சேலம் மக்களுக்கு மத்திய அரசு செலுத்தும் நன்றிக் கடனாக இருக்கும். நவீன மயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த ஆலையில் செயில் நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்தும், 5 ஆண்டுகளாக சேலம் இரும்பு ஆலை வேண்டும் என்றே தொடர்ந்து நஷ்டத்தில் இயக்கி வருகின்றனர். இதைக் காரணமாகக் கூறித்தான், தனியாருக்குத் தாரை வார்க்க மோடி அரசு தயாராகிவிட்டது.

உள்ளூர் நுகர்வுக்கான ஒப்பந்தங்கள் மூலம் உற்பத்தியைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஜிண்டால் போன்ற தனியார் நிறுவனங்களை தங்கள் தயாரிப்புகளுக்கு நம்பியிருக்கிறது. நாட்டிலேயே உயர்தர துருப்பிடிக்காத எஃகு தயாரிக்கும் ஒரே பொதுத்துறை நிறுவனம் சேலம் எஃகு ஆலை தான். 2006 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் சேலம் இரும்பு உருக்காலை 100 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியது. ஆண்டுக்கு 2 லட்சம் டன்களுக்கு மேல் விற்பனை நடைபெற்றதை, சதி வேலை செய்து நஷ்டத்தில் இயங்க வைத்திருக்கிறது மோடி அரசு.

சேலம் இரும்பாலையை நவீனமயமாக்கிப் புத்துயிரூட்டுவதற்கான வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும் கூட, அதைத் தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், அந்த ஆலைக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகத் தான். மத்திய அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.

அதைத் தமிழகம் அனுமதிக்காது. இதை உணர்ந்து கொண்டு சேலம் இரும்பாலைக்குப் புத்துயிரூட்டி இந்திய இரும்பு எஃகு நிறுவனத்தின் (செயில்) மூலம் பொதுத்துறை நிறுவனமாகவே நடத்த வேண்டும். ஒருவேளை சேலம் இரும்பாலைக்குப் புத்துயிரூட்ட முடியாது என்றால், அந்த ஆலை அமைந்துள்ள 4,000 ஏக்கர் நிலங்களையும், அவற்றை வழங்கிய நில உரிமையாளர்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்.

தனியாருக்கு 4,000 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தாரை வார்ப்பதற்காக சேலம் இரும்பு உருக்காலையை விற்பனை செய்யும் மத்திய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். தனியாருக்கு விற்றால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் நிலையை சற்றும் யோசிக்காத மோடி அரசுக்கு எதிராகத் தமிழகம் ஓரணியில் திரண்டு போராடும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ