மோடி அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது – வைகோ!

Published by
raj
Share

காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்

மோடி தலைமையிலான அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை அளிக்கிறது என மதிமுகப் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா நிறுவனமாகும்· நெய்வேலி நிலக்கரி சுங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மூலம், அனல் மின்சாரம் உற்பத்திச் செய்யப்பட்டு தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்கிறது.இந்நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள்,  பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என இருபத்தைந்து ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.பின்தங்கிய கடலூர் மாவட்டத்தின் ஒரே தொழில் நிறுவனமான என்.எல்.சி. இந்தியா ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் பங்குதாரர் முறையின்படி, 2023ஆம் டிசம்பர் நிலவரப்படி நிறுவனத்தில் 79.2 விழுக்காடு பங்குகளை ஒன்றிய அரசு வைத்திருக்கிறது. இதில் 7 விழுக்காடு பங்குகளை ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது எனவும், இந்தப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக 2,000 கோடி ரூபாய் முதல் 2,100 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2014 இல் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருகிறது. ஒன்றிய அரசின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின் உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாயை திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline)செயல் படுத்துவோம் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 7 விழுக்காடுப் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு முனைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு,பிப்ரவரி மாதம் என்.எல்.சி நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்திட வாஜ்பாய் அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. என்.எல்.சி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். கொந்தளிப்பான அந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில் 2002, மார்ச்சு 19 ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன்.

நாட்டுக்கு ஒளியூட்டும் என்.எல்.சி நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது என்று நான் வாதங்களை எடுத்துரைத்தேன். மக்களவையில் இருந்த அனைத்துக் கட்சிகளும் என் கருத்தை ஆதரித்தன மறுநாள் இரவு பிரதமர் வாஜ்பாய் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து என்.எல்.சியின் அனைத்து தொழிற்சங்கங்கள் பிரதமருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவை நேரில் அளித்தேன். என்.எல்.சி நிறுவனப் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என வற்புறுத்தினேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
Published by
raj
Tags: BJP Govt MDMK Modi MP Vaiko