2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகிற்கு ஒரு கலவையான ஆண்டாக அமைந்தது. பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை பல ஆச்சரியங்களை பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்தின. இந்த ஆண்டின் டாப் 10 ஹிட் படங்கள் மற்றும் சினிமா மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஆண்டை பொறுத்தவரை ஸ்டார் பவர் மற்றும் கதைக்களம் (Content) இரண்டுமே சமபலத்துடன் போட்டிப்போட்டன. லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியின் ‘கூலி’ முதல் பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ வரை வசூல் வேட்டையாடிய படங்களின் பட்டியல் இங்கே.
2025-ன் டாப் 5 வசூல் படங்கள்
2025-ஆம் ஆண்டின் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் ரீதியாகப் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. இந்த ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி (Coolie) திரைப்படம் சுமார் ₹518 கோடி வசூலித்து முதலிடத்தைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ₹248 கோடி வசூலைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இளைஞர்களின் அபிமான நட்சத்திரமாக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் வெளியான டிராகன் (Dragon) திரைப்படம் ₹150 கோடி வசூலித்தது. மேலும், அஜித் குமார் – மகிழ் திருமேனி கூட்டணியில் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ₹136 கோடி வசூலைப் பெற்றது. இறுதியாக, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் வெளியான டியூட் (Dude) திரைப்படம் ₹114 கோடி வசூலித்து, இந்த ஆண்டின் டாப் 5 வெற்றிப் படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.
சிறிய பட்ஜெட், பெரிய வெற்றி
2025-ல் பல சிறிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய லாபத்தை ஈட்டின. குறிப்பாக அறிமுக இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) மற்றும் சூரி – ஐஸ்வர்யா லெஷ்மி நடித்த மாமன் (Maaman) ஆகிய படங்கள் குடும்ப ரசிகர்களை கவர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு வெளியான விஷாலின் ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம், நகைச்சுவைக்காக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று லாபகரமான படமாக மாறியது.
வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்: பிரதீப் ரங்கநாதன் இந்த ஆண்டின் ‘வசூல் நாயகன்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு டிராகன் மற்றும் டியூட் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் 100 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்துள்ளார்.
எதிர்பாராத சரிவுகள்: அதேநேரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ (Thug Life) மற்றும் விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகப் பேசப்பட்டாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சிறந்த விமர்சனங்களைப் பெற்ற படங்கள்
வசூல் ரீதியாக மட்டுமின்றி, சிறந்த கதைக்காக விஜய்சேதுபதி- நித்யா மேனனின் ‘தலைவன் தலைவி’, குடும்பஸ்தன் மற்றும் அதர்வாவின் DNA, தனுஷின் ‘இட்லிக்கடை’ஆகிய படங்கள் பாராட்டுக்களை பெற்றன.


