உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியச் சேவைகள் சுமார் 24 மணி நேரம் முடங்கியதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க அந்நிறுவனம் ‘CODE RED’ என்ற அவசர நடவடிக்கைத் திட்டத்தை அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் (Exchange Online), அவுட்லுக் (Outlook), டீம்ஸ் (Teams), கோபைலட் (Copilot) உள்ளிட்ட மைக்ரோசாப்ட் 365 சேவைகள் பாதிக்கப்பட்டன.
உலகம் முழுவதும் பாதிப்பு
இந்தச் சேவை முடக்கத்தால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அரசு நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பல்வேறு நிறுவனங்களின் அன்றாடப் பணிகள் முடங்கின. சில வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகளில் தாமதமும், விமானப் போக்குவரத்து தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் சிக்கல்களும் ஏற்பட்டன.
இந்தச் சம்பவம் சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் கட்டமைப்பில் இருந்த ஒரு குறைபாடு இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருந்ததாக நிறுவனம் கண்டறிந்துள்ளது.
11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகவல்கள் பரிமாற்றம்
சேவை முடக்கத்தின்போது ஏற்பட்ட கோளாறைக் கண்டறிந்து சரிசெய்வதில் பொறியாளர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறியாளர்கள் 11 டீம்ஸ் உரையாடல் குழுக்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்திகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளில் தொழில்நுட்பத் தகவல்கள் சிதறிக் கிடந்ததால், பிரச்சினையின் மூலக் காரணத்தைக் கண்டறிந்து ஒருங்கிணைந்து செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டதாக நிறுவனத்தின் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.
‘CODE RED’ என்றால் என்ன?
மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள ‘CODE RED’ என்பது நிறுவனத்தின் மிக உயர்ந்த முன்னுரிமை கொண்ட அவசர நடவடிக்கைத் திட்டமாகும்.
இதன் மூலம் தொழில்நுட்பக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து, எதிர்காலத்தில் சேவைகள் முடங்கினால் விரைவாக மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக மின் சுமையைக் குறைத்தல், புவியியல் பகுதிகளின் அடிப்படையில் இணையப் போக்குவரத்தைப் பிரித்தல், சேவைகளை விரைவாக மீட்டெடுக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட ஐந்து முக்கியப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
ஒரு மணி நேரத்திற்குள் பிரச்சினையைச் சரிசெய்ய இலக்கு
எதிர்காலத்தில் உலகளாவிய அளவில் இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், அவற்றை ஒரு மணி நேரத்திற்குள் சரிசெய்வதை இலக்காகக் கொண்டு மைக்ரோசாப்ட் செயல்படத் திட்டமிட்டுள்ளது.
இதற்காகப் பொறியாளர்களுக்கு உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது. AI ஏஜென்ட்கள் மூலம் கணினி அமைப்புகளின் செயல்பாடுகளை விரைவாக ஆய்வு செய்து, கோளாறுகளைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், அவசரத் தொழில்நுட்பத் திருத்தங்களை உலகம் முழுவதும் விரைவாகச் செயல்படுத்தும் நடைமுறைகளையும் மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சத்யா நாதெள்ளா மன்னிப்பு
இந்தச் சேவை முடக்கத்தால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா மன்னிப்பு கோரியுள்ளார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் சேவைகளில் ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பப் பாதிப்பு, இணையவழிச் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாஃப்ட் சேவைகள்! அவுட்லுக், டீம்ஸ் செயல்படாததால் பயனர்கள் கடும் அவதி!
