Homeவணிகம்ரூ.500 வரை UPI பரிவர்த்தனை செய்தால் இனி SMS வராது! HDFC வங்கியில் புதிய மாற்றம்!

ரூ.500 வரை UPI பரிவர்த்தனை செய்தால் இனி SMS வராது! HDFC வங்கியில் புதிய மாற்றம்!

-

- Advertisement -

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.500 அல்லது அதற்குக் குறைவான தொகைக்கு UPI மூலம் பணம் செலுத்தினால், வங்கியிலிருந்து SMS அலர்ட் அனுப்பப்படாது என HDFC வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் மின்னஞ்சல் (Email) அறிவிப்புகள் தொடர்ந்து அனுப்பப்படும்.

ஜனவரி 1 முதல் என்ன மாற்றம்?

தற்போது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட UPI செயலிகள் மூலம் பணம் செலுத்தும்போது, பரிவர்த்தனை விவரங்கள் தொடர்பாக வங்கியிலிருந்து SMS அறிவிப்புகளும் கிடைக்கின்றன.

ஆனால், 2027 ஜனவரி 1 முதல் ரூ.500 அல்லது அதற்கும் குறைவான தொகைக்கான UPI பரிவர்த்தனைகளுக்கு HDFC வங்கி SMS அனுப்புவதை நிறுத்த உள்ளது. அதாவது ரூ.100, ரூ.200, ரூ.400 அல்லது ரூ.500 செலுத்தினாலும் வங்கியிலிருந்து SMS வராது.

ரூ.500-க்கு அதிகமான UPI பரிவர்த்தனைகளுக்கு வழக்கம்போல் SMS அறிவிப்புகள் தொடர்ந்து அனுப்பப்படும்.

அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் Email அலர்ட் உண்டு!

SMS அறிவிப்புகள் நிறுத்தப்பட்டாலும், அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் மின்னஞ்சல் அறிவிப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என HDFC வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி சரியாகவும், பயன்பாட்டில் உள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டிருந்தால், வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி, நெட் பேங்கிங் அல்லது அருகிலுள்ள வங்கிக் கிளை மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம்.

RBI-யின் புதிய விதிமுறைகள் என்ன?

இந்த மாற்றம் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி, ரூ.500-க்கு அதிகமான மின்னணுப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் உடனடி SMS அறிவிப்புகளை அனுப்ப வேண்டும். ரூ.500 அல்லது அதற்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு SMS அனுப்புவதா, வேண்டாமா என்பதை வங்கிகள் தங்களது உள்கொள்கைகளின் அடிப்படையில் முடிவு செய்துகொள்ளலாம். இருப்பினும், இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு SMS அனுப்பினால் வாடிக்கையாளர்களிடம் அதற்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

இந்த வழிகாட்டுதல் UPI பரிவர்த்தனைகளுக்கு மட்டுமல்லாமல், மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.

வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ரூ.500 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு SMS வரவில்லை என்பதற்காகப் பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்துவிட்டதாகக் கருத வேண்டாம். UPI செயலியின் பரிவர்த்தனை வரலாறு, வங்கியின் மொபைல் செயலி, மின்னஞ்சல் அல்லது வங்கிக் கணக்கு அறிக்கை மூலம் பணம் அனுப்பப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.

மேலும், வங்கியில் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்த்து புதுப்பித்துக்கொள்வது அவசியம். மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிப்பதாகக் கூறி வரும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் திறக்காமல், வங்கியின் அதிகாரப்பூர்வ வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஜியோவின் புதிய அறிவிப்பால் பயனர்கள் அதிர்ச்சி: இன்கமிங் கால் வசதி திடீரென துண்டிக்கப்படுமா?

MUST READ