
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதும், ஒரு சவரன் மீண்டும் ஒரு லட்ச ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளதும் நடுத்தர மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. தங்கம் விலைச் சரிவு இந்திய பொருளாதாரத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பொருளாதார நிபுணர் வி. நாகப்பன் அவர்கள் News18 தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் விரிவாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
டாலர் தேவையும் பணவீக்கக் கட்டுப்பாடும்
தங்கம் விலை சரிவு குறித்துப் பேசிய நிபுணர் நாகப்பன், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையும் போது, அதைக் வாங்குவதற்கான அந்நிய செலாவணி மற்றும் அமெரிக்க டாலருக்கான தேவை குறையும் என்று குறிப்பிட்டார் . இதன் காரணமாகவே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுப்பெற்று வருவதாகவும் (93 ரூபாயை நோக்கி நகர்வதாகவும்) அவர் தெரிவித்தார். தங்க இறக்குமதிக்கான தேவை குறைவது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரச் சூழலுக்கும், பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சாதகமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்கத்தின் எதிர்கால விலை நிலவரம் எப்படி இருக்கும்?
தங்கத்தின் விலையைத் துல்லியமாகக் கணிக்க முடியாது என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் தங்கம் இரட்டிப்பு லாபத்தைக் கண்டுள்ளதை அவர் நினைவுகூர்ந்தார். அதீத ஏற்றத்திற்குப் பிறகு தற்போதைய சந்தையில் ஒரு திருத்தம் (Correction) ஏற்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் தங்கம் விலையில் அதிரடியான ஏற்றமோ அல்லது கடுமையான வீழ்ச்சியோ இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறினார்.
பெரும்பாலும் தங்கம் விலை ‘பக்கவாட்டு நகர்தல்’ (Sideways Movement) நிலையிலேயே தொடரும் என்றும், விலை ஸ்திரத்தன்மையை எட்டும் இந்தக் காலகட்டம் சிறு முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் பொருளாதார நிபுணர் நாகப்பன் தெரிவித்துள்ளார்.
