நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள ‘கருங்காப்பியம்’ படம் ரிலீஸ் ஆக நீதிமன்றன் தடை விதித்துள்ளது.
நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருங்காப்பியம்’. ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம், காட்டேரி போன்ற படங்களை’ இயக்கிய டிகே இயக்கியுள்ளார்.
ரெஜினா கசான்ட்ரா, ரைசா வில்சன், ஜனனி உள்ளிட்ட நடிகைகளும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலையரசன், ஆதவ் கண்ணதாசன், யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ், அதிதி ரவீந்திரநாத், ஷெர்லின் சேத், நோய்ரிகா, லொல்லு சபா மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நீதிமன்றம் படம் ரிலீஸ் ஆக தடை விதித்துள்ளது.
இது குறித்து சஞ்ஜீத் சிவா ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான “சஞ்ஜித் சிவா ஸ்டுடியோஸ்”, நடிகர்கள் காஜல் அகர்வால், ரெஜினா கசான்ட்ரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடித்து பிரபல இயக்குனர் டிகே இயக்கிய “கருங்காப்பியம்” என்ற தமிழ் திரைப்படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடும் முழு விநியோக உரிமையை “ஐ கிரேஷன்ஸ்” நிறுவனத்தாரிடமிருந்து பெற்றிருந்தது.
இதற்கு தயாரிப்பு நிர்வாகமாகிய “பாவே என்டர்டைன்மெண்ட்ஸ்” நிறுவனமும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், சமீபகாலமாக மேற்படி “ஐ கிரேஷன்ஸ்” நிறுவனத்தார் தாங்களே நேரடியாக திரையிட போவதாக வெறும் வதந்தி பரப்பி வந்துள்ளனர். இவையாவும் இதர விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சஞ்சித் ஸ்டுடியோஸ் நிறுவனம் அவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இன்று இரு வாதங்களையும் கேட்ட நீதிபதி “கருங்காப்பியம்” தமிழ் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.