பிரதமர் மோடி ஆஸ்கர் நாயகர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஜோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் இரண்டு விருதுகள் தட்டி செல்லப்பட்டன. ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் வென்றது. பொம்மி மற்றும் ரகு என்ற இரு யானைகளை பொம்மன் மற்றும் பெல்லி என்ற தம்பதி இணைந்து வளர்க்கின்றனர். ஒரு கட்டத்தில் தங்கள் வளர்த்த யானை அவர்களைப் பிரிகிறது. இது தான் ஆவணப்படமாக எடுக்கப்பட்டிருந்தது.
ரகு என்ற ஆதரவற்ற யானைக்கும், பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினருக்கும் இடையிலான விலைமதிப்பற்ற பிணைப்பு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அறிமுக இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய 41 நிமிட குறும்படமான ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் வென்றதும் உலகளவில் கவனம் பெற்றது. பொம்மன் மற்றும் பெல்லி ஜோடிக்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கின. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பொம்மன் மற்றும் பெல்லி ஜோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பந்திப்பூர், முதுமலை புலிகள் சரணாலத்தையும் பிரதமர் பார்வையிட்டுள்ளார்.