வாட்ஸ்அப் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மெசேஜ்களை அனுப்பும் புதிய வசதியை அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த வசதி அறிமுகமானால், பயனர்கள் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, லிங்குகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்ப முடியும்.


தற்போது இந்த அம்சம் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் மேலும் பல பயனர்களுக்கு விரிவுபடுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படி ஷெட்யூல் செய்வது?
இந்த வசதி கிடைக்கும் பயனர்கள், வாட்ஸ்அப் உரையாடலில் தாங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜை முதலில் டைப் செய்ய வேண்டும். பின்னர், அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடித்தால், செய்தியை அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யும் வசதி தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் வரையிலான காலத்திற்கு முன்கூட்டியே செய்திகளைத் திட்டமிட முடியும் என்று கூறப்படுகிறது.
புகைப்படங்கள், வீடியோக்களையும் திட்டமிடலாம்
இந்தப் புதிய அம்சம் குறுஞ்செய்திகள், இணையதள இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஒரே நேரத்தில் ஒரு புகைப்படம் அல்லது ஒரு வீடியோவை மட்டுமே ஷெட்யூல் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
புகைப்படத்தை அனுப்புவதற்கு முன்பு அதில் திருத்தங்களைச் செய்யவும், விளக்க வாசகத்தைச் சேர்க்கவும் வாய்ப்பு இருக்கலாம்.
மொபைல் ஆஃப்லைனில் இருந்தாலும் செய்தி செல்லுமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம் வந்ததும், செயலி மூடப்பட்டிருந்தாலும் அல்லது அனுப்புபவரின் மொபைல் ஆஃப்லைனில் இருந்தாலும் செய்தி தானாக அனுப்பப்படும் வகையில் இந்த வசதி உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஷெட்யூல் செய்யப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கு முன்பு பார்க்கவும், தேவையில்லாதவற்றை நீக்கவும் உரையாடல் தகவல் பகுதியில் தனிப்பட்ட வசதி வழங்கப்படலாம். குழு உரையாடல்களிலும் இந்த அம்சம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது அனைவருக்கும் கிடைக்கும்?
ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.26.40.7 பயன்படுத்தும் சில சோதனையாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாகத் தொழில்நுட்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அனைத்து பயனர்களுக்கும் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த வசதி பொதுவாக அறிமுகமானால், பிறந்தநாள் வாழ்த்துகள், முக்கிய நினைவூட்டல்கள் மற்றும் அலுவலகச் செய்திகள் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்புவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
