இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வாட்ஸ்அப்பில் பகிர்வதை மேலும் எளிதாக்கும் புதிய வசதியை மெட்டா சோதனை செய்து வருகிறது.


தற்போது இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸை வாட்ஸ்அப்பில் பகிர வேண்டும் என்றால், குறிப்பிட்ட ரீல்ஸைத் தேர்வு செய்து ஷேர் ஆப்ஷன் மூலம் வாட்ஸ்அப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய வசதி முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டால், வாட்ஸ்அப்பில் இருந்தபடியே இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் உள்ள மீடியாவை அணுகி பகிர முடியும்.
டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை
இந்த புதிய வசதியின் மூலம் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் ஏற்கனவே பகிர்ந்துள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை முதலில் போனில் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
வாட்ஸ்அப்பில் மீடியாவைத் தேர்வு செய்யும் பகுதியில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றை மீடியா சோர்ஸ்களாக தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப்பில் இருந்தபடியே அந்த தளங்களில் பகிர்ந்துள்ள உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுத்து நண்பர்கள் அல்லது குழுக்களுக்கு அனுப்ப முடியும்.
Instagram, Facebook கணக்குகளை இணைக்க வேண்டும்
இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளை வாட்ஸ்அப்புடன் Accounts Center மூலம் இணைக்க வேண்டியிருக்கும்.
கணக்குகளை இணைத்த பிறகு, வாட்ஸ்அப்பில் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்வு செய்யும் பகுதியில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளுக்கான விருப்பங்கள் தோன்றும். அதில் தேவையான தளத்தைத் தேர்வு செய்து, ஏற்கனவே பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள், பதிவுகள், ஸ்டோரிகள் மற்றும் ரீல்ஸ்களில் இருந்து விரும்பியதைத் தேர்ந்தெடுத்து பகிர முடியும்.
தற்போது சோதனை நிலையில்
இந்த புதிய வசதி தற்போது வாட்ஸ்அப்பின் குறிப்பிட்ட பீட்டா பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கான சமீபத்திய பீட்டா பதிப்புகளில் இந்த வசதி சிலருக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. வரும் வாரங்களில் மேலும் பல பயனர்களுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெட்டாவின் அனைத்து சமூக வலைதளங்களையும் ஒன்றோடொன்று இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வசதி பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இடையே பல்வேறு கிராஸ்-பிளாட்ஃபார்ம் வசதிகளை மெட்டா அறிமுகப்படுத்தி வரும் நிலையில், இந்த புதிய அப்டேட் பயனர்கள் தங்களது உள்ளடக்கங்களை தளங்களுக்கு இடையே பகிர்வதை மேலும் எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளது.
