இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயக் கடன் மிக அதிகமாக அதாவது ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளதாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அளித்த பதிலின் அடிப்படையில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எழுப்பிய கேள்விகளும், அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலின் விவரமும் பின்வருமாறு:
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள்:
(a) விவசாயத் துறையில் நிலவும் நெருக்கடி மற்றும் கடன் சுமையைக் கருத்தில் கொண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரும் விவசாயிகளின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளதா?
(b) தமிழ்நாடு உட்பட சில மாநில அரசுகள் கூட்டுறவுப் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளில் அத்தகைய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பது உண்மையா?
(c) 2026 மார்ச் 31 நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளிடம் நிலுவையில் உள்ள மொத்த விவசாயக் கடன்களின் மாநில வாரியான விவரம் என்ன?
(d) சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது குறித்து அரசு உத்தேசித்துள்ளதா?
மத்திய அமைச்சரின் பதில் விவரம்:
கடன் மறுசீரமைப்பு வழிகாட்டுதல்கள்: கடன் நெருக்கடியில் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி ‘அழுத்தத்திற்குள்ளான சொத்துக்களைத் தீர்வு காண்பதற்கான முதன்மை வழிகாட்டுதல்கள், 2025’-ஐ (2025 நவம்பர் 28 தேதியிடப்பட்டு, 2026 ஜூலை 1 அன்று புதுப்பிக்கப்பட்டது) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் தங்களது வாரியக் கொள்கைகளின்படி கடன்களை மறுசீரமைப்பு செய்ய அதிகாரம் பெற்றுள்ளன.
கடன் தள்ளுபடி இல்லை: கடந்த மூன்று நிதியாண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கு எந்தவிதமான கடன் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை எனத் தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிலைப்பாடு: சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
எம்.பி. ரவிக்குமார் குற்றச்சாட்டு:
அமைச்சர் அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 2026 மார்ச் 31 நிலவரப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் நிலுவைத் தொகை ரூ.3,44,996.64 கோடியாகும் (மூன்று லட்சத்து நாற்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு கோடியே அறுபத்து நான்கு லட்ச ரூபாய்) ஆகும். இதுவே இந்தியாவிலேயே அதிகபட்சமாகும் என்று ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், வாழ்வாதாரத்திற்காகப் போராடும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய அது தொடர்ந்து மறுக்கிறது” என்று மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
