ரூபாய் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகத் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், தமது குடும்பத்தில் 2 கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கும் அளவிற்கு வசதி இல்லை என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கான விளக்கங்களையும் அளித்தார்.
கோவில்களில் வெளிப்படையான டெண்டர் முறை மற்றும் டிஜிட்டல் மயம்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:
பொதுவான டெண்டர் முறைகள்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறைகள் கொண்டுவரப்பட்டு, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே நிறுவனம் அனைத்து டெண்டர்களையும் எடுப்பதைத் தவிர்த்து, அனைவரும் பங்கேற்கும் வகையில் பணிகள் அனைத்தும் ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளன.
விலை குறைப்பு நடவடிக்கை: குறைந்த செலவுக்கான கொட்டேஷன் முறையை மாற்றி, கொட்டேஷன்கள் பெறப்பட்ட பிறகு மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டு, அதைவிடக் குறைந்த விலைக்கு முன்வருபவர்களுக்கே டெண்டர் வழங்கப்படுகிறது.
டிஜிட்டல் பில்லிங் மற்றும் பார்க்கிங்: கோவில்களில் உள்ள கடைகளில் டிஜிட்டல் பில்லிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, முறையான விலையில் பொருட்கள் விற்கப்படுவதை உறுதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பார்க்கிங் வசதிகளுக்கும் டிஜிட்டல் முறைகள் கொண்டுவரப்படவுள்ளன.
ஊழியர்களின் நலன்: தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கோவில் காவலாளர்களின் புகார்கள் மீதான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு முறையான ‘பே ஸ்லிப்’ (Pay Slip) வழங்கி, சம்பளப் பிடித்தங்களை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் கோவில் ஷூ சர்ச்சை மற்றும் பழனி விவகாரம்
ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் காலணியுடன் சென்றது குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்த அமைச்சர், “நீண்ட காலமாக கோபுர சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால், அங்கு ஆணிகள் கிடந்தன. பணியாளர்களின் அறிவுறுத்தலின்பேரில்தான் நான் காலணி அணிந்து சென்றேன். பகுத்தறிவு இல்லாதவர்கள்தான் இது போன்ற சர்ச்சைகளைக் கிளப்புவார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், பழனி கோவில் விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், கோரிக்கையை ஏற்று சி.பி.சி.ஐ.டி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
நில மோசடி குற்றச்சாட்டுக்கு மறுப்பு
தன் மீதான நில மோசடி குற்றச்சாட்டுகள் குறித்துக் கோபம் தெரிவித்த அமைச்சர் ரமேஷ், “சீப்பைத் திருடிவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போன்ற பாணியில் என் மீது சிலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 2 கோடிக்கு வாங்கியதாகப் பொய் பழி சுமத்துகிறார்கள்; என் குடும்பத்தில் 2 கோடி ரூபாய்க்குச் சொத்து மதிப்பே கிடையாது. நான் நிலம் வாங்க வேண்டும் என்றால் சென்னையில் வாங்க மாட்டேனா? பழனியிலா போய் வாங்குவேன்?” என்று கேள்வி எழுப்பினார்.
சர்வதேச அரசியல் களம்: இஸ்ரேல் – ஈரான் மோதலும், அமெரிக்காவின் புதிய வியூகமும்!
