தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு நூறு நாட்களைக் கடக்கவுள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன் குறித்து இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.


மக்களின் சுமையும் மின் கட்டண உயர்வும்
முதலமைச்சர் விஜய் அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய தடா ரஹீம், “நூறு நாளில் ஒரு லட்சம் கோடி முதலீடு என்ற தகவல்கள் ஆதாரமற்றவை. ஏற்கனவே இருந்த அரசு கொண்டுவந்த திட்டங்களைத்தான் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மின்சாரக் கட்டண உயர்வால் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நடுத்தர குடும்பங்கள், தாங்க முடியாத கட்டண உயர்வைச் சந்தித்து வருகின்றனர். இது குறித்துக் கேட்டால், அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர்” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமின்மை
அரசின் செயல்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்துதான் நிர்வாகம் சீராகும் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது எனத் தடா ரஹீம் வாதிட்டார்.
“அரசு என்பது மக்களுக்கானது. ஆட்சிக்கு வந்த அன்றே திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அதிகாரத்தை அரசு கையாள வேண்டும். நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் குளறுபடிகளை மறைக்க, ‘ஆட்சி அமைத்து நூறு நாட்கள்தான் ஆகிறது’ என்று சாக்குப்போக்கு கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்றார்.
தேர்தல் வாக்குறுதிகளும் ஏமாற்றமும்
தேர்தலுக்கு முன்னதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய கள எதார்த்தம் குறித்து அவர் விமர்சிக்கையில், “தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு 2500 ரூபாய் தருவதாகக் கூறிய வாக்குறுதி உட்பட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
ஆட்சிக்கு வந்த பிறகு கஜானா காலியாக இருக்கிறது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். இதுபோன்ற வாக்குறுதிகளால் மக்களைக் கவர்ந்ததே தவிர, உண்மையான வளர்ச்சி எதுவும் நிகழவில்லை” என்று காட்டமாக விமர்சித்தார்.
கூட்டணி அரசியல் மற்றும் சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினருக்கான ஆதரவு அரசு என்ற பிம்பத்தை விஜய் அரசு உருவாக்குவதாகக் குறிப்பிடும் தடா ரஹீம், உண்மையில் சிறுபான்மையினருக்குத் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், மேகதாது விவகாரம் மற்றும் மாநிலத்தின் முக்கிய உரிமைகளில் அரசு மெத்தனமாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளைச் செவிமடுக்கத் தவறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக அணுகுமுறை, ஒரு முதிர்ச்சியற்ற நிலையில் இருப்பதாகக் குறிப்பிடும் தடா ரஹீம், “ஆட்சி அதிகாரம் என்பது ரீல்ஸ் (Reels) பதிவிடுவதிலும், விளம்பரங்களிலும் இல்லை. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில்தான் உள்ளது” எனத் தனது விமர்சனத்தை நிறைவு செய்தார்.
எம்.ஜி.ஆர் சாதனையில் 1% கூட விஜய்யினால் செய்ய முடியாது: பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கணிப்பு!
