மருத்துவ பரிசோதனைகளுக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


3 ஆண்டுகளாகச் சிறைவாசம்
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவரும், நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் (73) மீது சுமத்தப்பட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2023 ஆகஸ்ட் 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையின் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு
3 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்தது, அவரை இஸ்லாமாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, 48 மணி நேரத்திற்குள் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டது.
மருத்துவப் பரிசோதனை முடிந்தது
நீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கான் பலத்த பாதுகாப்புடன் அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டது.
பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், அவர் மீண்டும் அடியாலா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
