விமானப் பயணத்தின்போது 77 வயது முதியவர் ஒருவர் ChatGPT-யின் உதவியுடன் புதிய தொழில் திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, அவர் ChatGPT-யை ஒவ்வொரு முறையும் மரியாதையுடன் ‘சார்’ என அழைத்த விதம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த சம்பவத்தை ‘Teknosaur’ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் செயல்படும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்துள்ளார். விமானத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த 77 வயது முதியவர், விமானம் புறப்படுவதற்கு முன்பாக தனது செல்போனில் ChatGPT-யுடன் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்ததை அவர் கவனித்துள்ளார்.
அந்த முதியவர், ‘Vertical Farming’ எனப்படும் செங்குத்து விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான Business Plan ஒன்றை ChatGPT உதவியுடன் தயாரித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vertical Farming என்பது பாரம்பரிய முறையில் நிலப்பரப்பில் பயிர்களை வளர்ப்பதற்கு பதிலாக, பல அடுக்குகளாக மேல்நோக்கி பயிர்களை வளர்க்கும் விவசாய முறையாகும். குறைந்த இடத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான நவீன அணுகுமுறையாக இது கருதப்படுகிறது.
ஆனால், அந்த முதியவர் ChatGPT-யிடம் தொழில் திட்டம் குறித்து ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், AI-யிடம் பேசிய விதம்தான் அவருடன் பயணித்த தொழில்நுட்ப நிபுணரின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.
ChatGPT உரையாடலின் போது, அவர் AI-யை மீண்டும் மீண்டும் ‘Sir’ என்று மரியாதையுடன் அழைத்துள்ளார். ஒரு கட்டத்தில், “சிறப்பான வழிகாட்டுதலுக்கு நன்றி சார். மீண்டும் உங்களை அணுகுகிறேன் சார். இரண்டு கோப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்கிறேன் சார்” என்ற பொருளில் அவர் ChatGPT-க்கு பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவருடன் பயணித்த தொழில்நுட்ப நிபுணர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், விமானப் பயணத்தின் போது இருவரும் தொடர்ந்து பேசியதாகவும், பயணத்தின் முடிவில் இருவரும் நண்பர்களாகிவிட்டதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. 77 வயதிலும் புதிய தொழில்நுட்பத்தை ஆர்வத்துடன் பயன்படுத்தி, புதிய தொழில் முயற்சிக்கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்த முதியவரின் ஆர்வம் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பலரும் அந்த முதியவரின் மரியாதையான அணுகுமுறை குறித்து நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஏதேனும் கற்பனை உலக சூழல் ஏற்பட்டால், ChatGPT-யை ‘சார்’ என்று மரியாதையுடன் அழைத்ததால் அவர் பாதுகாக்கப்படுவார் என சிலர் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், வயது என்பது புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடையல்ல என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
77 வயதில் புதிய தொழில் யோசனையை உருவாக்குவதற்காக ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தியதுடன், அதனுடன் மிகவும் மரியாதையாக உரையாடிய இந்த முதியவரின் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
