தில்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலியாக, புனேவில் செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்த ‘ஸ்க்ரோல்’ (Scroll) ஊடகத்தின் பத்திரிகையாளர் திவ்யா அஸ்லேஷா, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை வாகனத்திற்குள் இருந்தவாறு அவர் வெளியிட்ட காணொளி, ஊடகவியலாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.


காவல்துறை வாகனத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட காணொளி:
புனேவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சனிவார் வாடா (Shaniwar Wada) பகுதிக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற பெண் போராட்டக்காரர்களுடன் தானும் கைது செய்யப்பட்டு, காவல்துறை வாகனத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக திவ்யா அஸ்லேஷா அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் ஒரு ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் என்பதைப் காவல்துறையினரிடம் பலமுறை விளக்கிக் கூறிவிட்டேன். ஆனாலும் எங்களை ஏன் கைது செய்கிறார்கள் என்பதற்கான எந்தவொரு காரணத்தையும் அவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை. எங்களது வாகனம் சனிவார் வாடா பகுதியைச் சுற்றியே வலம்வந்து, இப்போது வேறு திசையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்ற எந்தவிதத் தெளிவுமின்றி காவல்துறையினர் வாகனத்தை இயக்கி வருகின்றனர்” என்று வேதனை தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகரில் தொடங்கிய போராட்டம் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் ஊடகச் சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
