டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, கட்சியின் போராட்டத்தை அஜிங்க்யா ஷிண்டே வழிநடத்துவார் என அபிஜீத் தீப்கே முன்கூட்டியே பதிவு செய்த வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.


சி.ஜே.பி. நிர்வாகிகள் கைது
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சி.ஜே.பி. திட்டமிட்டிருந்தது. இதற்காக டெல்லிக்கு வந்த அபிஜீத் தீப்கே, சவுரவ் தாஸ், அஷுடோஷ் ரங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை விமானம் டெல்லியில் தரையிறங்கியபோது போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தை வழிநடத்தும் அஜிங்க்யா ஷிண்டே
தாம் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்த அபிஜீத் தீப்கே முன்கூட்டியே வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், தானும் மற்ற முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டால், அஜிங்க்யா ஷிண்டே போராட்டத்தையும் சி.ஜே.பி. இயக்கத்தையும் முன்னின்று வழிநடத்துவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, கட்சியின் தேசிய அமைப்பு பொறுப்பாளரான அஜிங்க்யா ஷிண்டே போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
யார் இந்த அஜிங்க்யா ஷிண்டே?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஜிங்க்யா ஷிண்டே, அபிஜீத் தீப்கேவுடன் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா அணியில் சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கட்சிப் பணிக்காகத் தனது கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவா சட்டமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சிக்காகப் பணியாற்றிய அவர், பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். தற்போது சி.ஜே.பி.யின் தேசிய அமைப்பு பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.
முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை அஜிங்க்யா ஷிண்டே எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறார் என்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
மாணவன் தலையில் தபேலா வாசித்த ஆசிரியர் சஸ்பெண்ட்! விபத்துக்குப் பின் கட்டியணைத்த ஓட்டுநர் வைரல்
