இங்கிலாந்தில் சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தின் அருகே அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்று மிக வேகமாகக் கடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹீத்ரோவில் இருந்து புறப்பட்ட விமானம்
கடந்த ஜூன் 24-ஆம் தேதி, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம், அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விமானம் சுமார் 5,800 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, அதன் வலதுபுற இறக்கைக்கு அருகே பளபளப்பான வெள்ளி நிறப் பொருள் ஒன்று எதிர்த்திசையில் மிக வேகமாகக் கடந்ததாக விமானி தெரிவித்துள்ளார்.
அந்தப் பொருள் விமானத்தின் உயரத்தைவிட சுமார் 50 அடி மேலாகக் கடந்ததாக விமானி குறிப்பிட்டுள்ளார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம் தகவல் தெரிவித்தபோது, அது உலோகத்தால் ஆனது போலவும், ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டதாகவும் இருந்ததாக அவர் விவரித்துள்ளார்.
‘நான்கு டோஸ்டர்களின் அளவு’
மர்மப் பொருளின் அளவு குறித்து கேட்டபோது, அது சுமார் நான்கு டோஸ்டர்களின் அளவு இருந்ததாக விமானி ஒப்பிட்டுக் கூறியுள்ளார். முதலில் அது டிரோனாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டாலும், அந்தப் பொருள் உண்மையில் என்ன என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
விசாரணையில் தெரியவந்தது என்ன?
இந்தச் சம்பவத்தை இங்கிலாந்தின் UK Airprox Board ஆய்வு செய்தது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விமானத்துக்கும் அடையாளம் தெரியாத பொருளுக்கும் இடையே கடுமையான மோதல் அபாயம் இருந்திருக்கலாம் என விசாரணைக் குழு வகைப்படுத்தியது.
ஆனால், அந்தப் பொருளை உறுதிப்படுத்தும் வகையில் ரேடார் பதிவுகள் கிடைக்கவில்லை. அதன் தன்மை, உண்மையான அளவு மற்றும் அது எவ்வாறு அங்கு வந்தது என்பதையும் விசாரணைக் குழுவால் தீர்மானிக்க முடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக, விமானம் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டது. இருப்பினும், பயணிகள் விமானங்களுக்கு அருகில் அடையாளம் தெரியாத பொருட்கள் பறப்பது விமானப் பாதுகாப்பு தொடர்பான கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மர்மப் பொருள் டிரோன் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. அது தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்தால்தான் அதன் உண்மையான தன்மையைத் தீர்மானிக்க முடியும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்!
