Homeசெய்திகள்உலகம்வானில் நிகழ்ந்த ஆபத்தைத் தடுத்த இந்திய விமானி: ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி...

வானில் நிகழ்ந்த ஆபத்தைத் தடுத்த இந்திய விமானி: ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

-

- Advertisement -

இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தின்போது காட்டிய துணிச்சலுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘ஆர்டர் ஆஃப் சயீத் II’ விருதைப் பெற்றுள்ளார். அவருடன் விமானக் குழுவினரும் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபாய் விமானம் FZ1073-ல் அவசரநிலை ஏற்பட்டது. விமானத்தின் காக்பிட்டில் இணை விமானி நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் கேப்டன் ஸ்மித் மச்சார் படுகாயமடைந்தார்.

கடுமையான காயங்களுக்கு மத்தியிலும் அவர் காக்பிட் கதவைத் திறக்க உதவியதால், விமானப் பணியாளர்களும் பயணிகளும் உள்ளே சென்று தாக்குதலில் ஈடுபட்டவரைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதனால் பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது

கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் சம்பவத்தின்போது துணிச்சலுடன் செயல்பட்ட ஃப்ளைதுபாய் விமானக் குழுவினருக்கு, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சார்பில் ‘ஆர்டர் ஆஃப் சயீத் II’ விருது வழங்கப்பட்டது.

துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் விருதுகளை வழங்கிக் கவுரவித்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானக் குழுவினர் காட்டிய துணிச்சலும் தொழில்முறை அர்ப்பணிப்பும் பாராட்டப்பட்டன.

சர்வதேச அளவில் குவியும் பாராட்டுகள்

இந்தச் சம்பவத்தில் கேப்டன் மச்சார் காட்டிய துணிச்சலுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் அரசும் அவருக்கு குடிமக்கள் துணிச்சலுக்கான உயரிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. அவர் காயங்களிலிருந்து முழுமையாகக் குணமடைந்த பிறகு அந்த விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்தவர்களின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் கடுமையான சூழலிலும் செயல்பட்ட கேப்டன் மச்சார் மற்றும் விமானக் குழுவினரின் செயல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

6,000 அடி உயரத்தில் விமானம்… மிக அருகில் கடந்த மர்மப் பொருள்! விமானப் பாதுகாப்பு விசாரணையில் அதிர்ச்சி

MUST READ