அமெரிக்காவைச் சேர்ந்த ராக்ஸ்டார் கேம்ஸ் (Rockstar Games) நிறுவனம் தயாரித்துள்ள ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6’ (GTA 6) வீடியோ கேம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த புதிய கேம், வெளியீட்டுக்கு முன்பே வசூலில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.

1997-ல் தொடங்கிய ஜிடிஏ பயணம்!
ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் கடந்த 1997-ம் ஆண்டு ‘ஜிடிஏ 1’ என்ற பெயரில் அதிரடி மற்றும் சாகச வீடியோ கேமை வெளியிட்டது.
இதன் தொடர்ச்சியாக 1999, 2001, 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. குறிப்பாக 2013-ம் ஆண்டு வெளியான ஜிடிஏ 5 உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிடிஏ 6 வீடியோ கேம் நவம்பர் 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.8,400 கோடி செலவில் உருவாக்கம்!
இந்த புதிய வீடியோ கேம் சுமார் ரூ.8,400 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 1.7 கோடி பேர் முன்பதிவு செய்து கேமை வாங்கியுள்ளனர். இதன் மூலம் முன்பதிவு மூலமாகவே சுமார் ரூ.13,800 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வெளியான முதல் வாரத்திலேயே சுமார் ரூ.43,000 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாடுபவர்களுக்கு முழு சுதந்திரம்!
வழக்கமான வீடியோ கேம்களில் குறிப்பிட்ட பாதையில் செல்வது அல்லது எதிரிகளைத் தாக்குவது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும்.
ஆனால் ஜிடிஏ விளையாட்டில் வீரர்கள் தங்களுக்குப் பிடித்த வகையில் கதையை நகர்த்த முடியும். கற்பனையான லியோனிடா மாகாணத்தின் வைஸ் சிட்டியில் நடைபெறும் கதையில் ஜேசன் டுவால் மற்றும் லூசியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் காதலர்களாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கூட்டாளிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
கற்பனை நகரத்தில் கார் ஓட்டுவது, ஹெலிகாப்டரில் பறப்பது, சண்டையிடுவது என பல்வேறு அனுபவங்களை இந்த விளையாட்டு வழங்குகிறது.
இந்தியாவில் ஜிடிஏ 6 விலை எவ்வளவு?
இந்தியாவில் ஜிடிஏ 6 வீடியோ கேமின் ஸ்டாண்டர்டு எடிஷனுக்கு ரூ.5,999-ம், அல்டிமேட் எடிஷனுக்கு ரூ.7,499-ம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிடிஏ பாணியில் பிரதமர் மோடி வெளியிட்ட சாதனைப் பட்டியல்!
ஜிடிஏ 6 வெளியீட்டை ஒட்டி, இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜிடிஏ கேம் பாணியில் மத்திய பாஜக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய கார்ட்டூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் 100 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி, 175 ஜிகாவாட் மின் உற்பத்தி, 440 விண்வெளி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ரயில்வே துறையில் 99.6 சதவீத மின்மயம், ரூ.7.51-க்கு 5ஜி டேட்டா உள்ளிட்ட சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள ஜிடிஏ 6, வீடியோ கேம் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளாவிய பொழுதுபோக்குத் துறையிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
