Homeசெய்திகள்கட்டுரை'ஊழல் ஆவணங்கள்' மிரட்டல்: இது நிர்வாக முதிர்ச்சியற்ற செயல் - ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி...

‘ஊழல் ஆவணங்கள்’ மிரட்டல்: இது நிர்வாக முதிர்ச்சியற்ற செயல் – ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், ஊழல் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகளுக்கு விடுத்த எச்சரிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த நடவடிக்கையை “நிர்வாக முதிர்ச்சியற்ற செயல்” என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் விமர்சித்துள்ளார்.

we-r-hiring

“ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பாலசந்திரன், ஊழல் ஒழிப்பு குறித்து முதலமைச்சர் விஜய் ஆவேசமாகப் பேசுவதைக் கடுமையாகச் சாடியுள்ளார். “ஊழல் குறித்து முதலமைச்சர் மேஜையில் ஆவணங்கள் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவர் இன்னும் அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தால் உடனடியாக வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, ‘நான் திறந்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்’ என்று சட்டமன்றத்தில் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான அரசியல் கிடையாது,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“லஞ்சம் என்பது ஒரு கேன்சர்”

நிர்வாக அனுபவம் வாய்ந்த பாலசந்திரன், அரசு இயந்திரத்தில் ஊழல் வேரூன்றியுள்ளதை ஒப்புக்கொள்கிறார். “பதிவு அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை எனப் பல இடங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் இன்றும் நீடிக்கிறது. ஊழலை ஒழிப்பது ஒரு நாள் பயிற்சியல்ல; அது நீண்ட கால நிர்வாக நடவடிக்கை. முறையான கண்காணிப்பு செல்கள் (Monitoring Cells) மூலம் மட்டுமே ஊழலைக் குறைக்க முடியும். வெறும் மிரட்டல்கள் ஊழலை ஒழிக்காது,” என்று அவர் விளக்கியுள்ளார்.

“நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை”

முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கும், அவரது செயல்பாட்டுக்கும் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறும் பாலசந்திரன், “திராவிடக் கொள்கைகளின் அடிப்படை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாகும். ஆனால், இன்று உங்கள் கட்சிக்குள்ளேயே பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. உங்களிடம் ஆவணங்கள் இருந்தால், அதைச் சட்டத்தின் முன் வையுங்கள். அதை விட்டுவிட்டு, யாரையோ சமாதானப்படுத்தவோ அல்லது அரசியல் ஆதாயம் தேடவோ மிரட்டல் விடுப்பது எந்த வகையில் வெளிப்படைத்தன்மை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“நடிகர் விஜய், முதல்வர் விஜய் மாறுபட வேண்டும்”

திரைப்படங்களில் வசனம் பேசுவதற்கும், நிர்வாகத்தைச் செலுத்துவதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்று எச்சரிக்கும் அவர், “விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அரசியலில் அவர் தனது புத்திசாலித்தனத்தை நிர்வாகத்தை மேம்படுத்தப் பயன்படுத்த வேண்டும். மிரட்டல் அரசியல் காலாவதியானது. தகுதியான நிர்வாகத்தையும், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியையுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்,” என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“உயிர் தப்பி வந்தேன்!”: விசிக மாநாட்டு நெரிசல் குறித்துத் தொல். திருமாவளவன் வேதனை!

MUST READ