திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றுள்ளார். நீண்ட காலமாக திமுக மீது வைக்கப்பட்டு வந்த முக்கிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், உட்கட்சி அமைப்பில் இளைஞர்களுக்கும் தொண்டர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் அதிரடி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


உட்கட்சி சீர்திருத்தங்கள் மற்றும் வயது வரம்புகள்
கட்சியின் அனைத்து நிலைகளிலும் புதிய ரத்தத்தைப் பாய்ச்சவும், பல தலைமுறைகளாக உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கவும் பல்வேறு வயது வரம்புகளும் பதவி நேரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன:
கிளைக் கழகம்: கிளைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே இந்தப் பதவியில் நீடிக்க முடியும்.
வட்டக் கழகம் & பேரூர் / நகரக் கழகம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்ள வட்டங்கள் மற்றும் பேரூர், நகரக் கழக செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பகுதிக்கழகம்: சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளில் உள்ள பகுதிக்கழக செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 ஆகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கழகம்: மாவட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
2 முறை மட்டுமே பதவி: குறுநில மன்னர்கள் முறைக்கு முற்றுப்புள்ளி
கட்சியின் கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை எந்தவொரு நிர்வாகியும் அதிகபட்சமாக இரண்டு முறை (2 Terms) மட்டுமே அதே பொறுப்பில் நீடிக்க முடியும்.
இதன் மூலம் ஒரே நபர் அல்லது ஒரே குடும்பத்தினர் நீண்ட காலம் பதவிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் நிலை மாற்றப்பட்டு, கட்சிக்காக உழைக்கும் சாதாரணத் தொண்டர்களுக்கும் அடுத்தடுத்த நிலைகளுக்கு (Promotion) முன்னேறும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
தலைவர் மு.க.ஸ்டாலினின் உருக்கமான உரை
செயற்குழுவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
குறைபாடுகளை உணர்தல்: “ஒரு விளக்கு ஊருக்கே வெளிச்சம் தரும் போது, தனக்கு கீழே இருக்கும் இருளை அது கவனிக்கத் தவறிவிடும். அதுபோலத்தான் நம்மிடம் இருந்த சில குறைபாடுகளை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதன் காரணமாகவே இந்தத் தேர்தல் முடிவு ஏற்பட்டது.”
எதிர்கால நம்பிக்கை: “நாம் அரசியலுக்குப் போராட வந்தவர்கள்; தற்காலிகமாக வந்தவர்கள் அல்ல. வெற்றி தோல்விகளில் நம் இயக்கத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கவில்லை. தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தல் வரை தூங்குவது மற்ற கட்சிகளின் வழக்கம். ஆனால், எத்தகைய சூழலிலும் கம்பேக் (Comeback) கொடுப்பதில் நாம் எப்போதும் ஸ்பெஷலிஸ்ட்” எனப் பேசியுள்ளார்.
