- Advertisement -
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி பெரும் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் இந்தியன். இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, சுகன்யா, கவுண்டமணி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டே வெளியானது.

ஷங்கர் இயக்கத்தில் முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசனே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதில், கமலுடன் இணைந்து, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா உள்பட பலர் முக்கியகதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று, அண்மையில் முடிவடைந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்தியன் 2 படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


