கைதி படத்தில் “லைஃப் டைம் செட்டில்மெண்ட்… டா” என கர்ஜித்து வில்லனாகப் புகழ்பெற்ற அர்ஜுன்தாஸ், அடுத்தடுத்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நாயகனாகவும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர் படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. அதைத்தொடர்ந்து OTT தளத்தில் வெளியான அந்தகாரம் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். தெலுங்கில் “புட்டபொம்மா” படத்தில் நடித்துப் புகழ் பெற்றார்
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “அநீதி” படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இருப்பினும் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்நிலையில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் “ரசவாதி” படத்தின் டீசர் இன்று (05.12.2024) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. முக்கிய காரணம் படத்தின் இயக்குனரான சாந்தகுமார். 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான “மௌனகுரு” என்ற தரமான படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு 8 வருடங்கள் கழித்து ஆர்யாவை வைத்து “மகாமுனி” படத்தை இயக்கியிருந்தார். ஆர்யாவின் கேரியர் பெஸ்ட் திரைப்படங்களில் நிச்சயம் மகாமுனி திரைப்படம் இடம்பெற்றிருக்கும். அந்த அளவுக்கு தரமான படைப்பாக உருவாகி இருந்தது மகாமுனி. இத்தகைய தரமான படைப்புகளுக்கு அடுத்து அர்ஜுன்தாஸ் ஹீரோவாக நடித்துள்ள ரசவாதி படமும் தரமான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டீசரிலேயே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -