ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான டீசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இளம் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே சமயம் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாகவே டீசல் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அதுல்யா ரவி, வினய் ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மீனவனாக நடித்திருந்தார். ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக வெளியான இந்தப் படத்தை தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க சண்முகம் முத்துசாமி இதனை இயக்கியிருந்தார்.
இந்த படம் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்களைப் போல் ரசிகர்களை கவரவில்லை. எனவே கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இப்படமானது வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி சிம்பிளி சௌத் மற்றும் ஆஹா தமிழ் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
