கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘இந்தியன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படம் கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரகனி மற்றும் பலர் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் நிறைவடைந்து விடும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் காட்சிகளை பார்த்த கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கருக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.
அத்துடன் சங்கருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாக கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் கமல், விக்ரம் படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கும் இதுபோன்ற விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.