32-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள இந்தத் திரைப்பட விழா, டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவின் தலைமை ஆலோசகரும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற விக்டோரியா நினைவிடத்தில் சிவப்புக் கம்பள வரவேற்புடன் தொடக்க விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அங்கு பிரபல நடிகர்களின் கட்-அவுட்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.
மேலும், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் பிரபாஸ் ஆகியோர் விழாவில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். நடிகர்கள் அனுபம் கெர், கங்கனா ரனாவத், பரேஷ் ராவல் உள்ளிட்டோரையும் அழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களையும் அழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வழக்கமாக நவம்பர் மாதத்தில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழா, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடுவதற்காகப் பரிசீலனையில் உள்ளன.
மேலும், வங்காளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் உத்தம் குமார் நடித்த திரைப்படங்களும் இந்த விழாவில் முக்கிய இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1995-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, இந்தியாவின் முக்கியமான சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். ரஜினிகாந்த் மற்றும் பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த ஆண்டு விழா குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரிலீசுக்கு முன்பே ரூ.350 கோடி பிசினஸ் செய்த ராஜ்கமல் பிலிம்ஸ்? எப்படி தெரியுமா?
