டெல்லியில் நடைபெற உள்ள தசரா விழாவில், ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் 30 அடி உயரமுள்ள கரப்பான் பூச்சியின் உருவ பொம்மையையும் எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான முயற்சி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


பிதாம்புராவில் நடைபெறும் ராம்லீலா நிகழ்ச்சி
டெல்லியின் பிதாம்புரா பகுதியில் ஸ்ரீ கேஷவ் ராம் லீலா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விஜயதசமி விழாவையொட்டி, பாரம்பரியமாக எரிக்கப்படும் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவ பொம்மைகளுடன் கரப்பான் பூச்சியின் உருவ பொம்மையையும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சி உருவ பொம்மை ஏன்?
இதுகுறித்து கமிட்டியின் தலைவரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான அசோக் கோயல் கூறுகையில், கரப்பான் பூச்சி அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற சூழலின் அடையாளமாகக் கருதப்படுகிறது என்றார். வீடுகள், சுற்றுப்புறங்கள் மற்றும் சமூகத்தில் தூய்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த முயற்சி அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்றும், தீமையை நன்மை வெல்வதை எடுத்துக்காட்டும் விஜயதசமி விழாவின் செய்தியை வலியுறுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம்: விவாதத்தை ஏற்படுத்திய முடிவு
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழலில், தசரா விழாவில் கரப்பான் பூச்சி உருவ பொம்மையை எரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கும் அரசியல் போராட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தூய்மை மற்றும் தீமையை வெல்லும் நன்மை என்ற கருத்தை முன்னிறுத்துவதே தங்களது நோக்கம் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி: நாடு முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்ய பாஜக திட்டம்!
