Homeசெய்திகள்தமிழ்நாடுஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகள் போல் வளர்க்கப்படுகிறது - தமிழக அரசு Jallikattu bulls are...

ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகள் போல் வளர்க்கப்படுகிறது – தமிழக அரசு Jallikattu bulls are raised like children – Tamil Nadu Govt

-

ஜல்லிக்கட்டில் விடப்படும் காளைகள் குழந்தைகள் போல் பேர் வைத்து வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்பு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதை போல போட்டி முடிந்த பின்னரும் காளைகளுக்கு மருத்துவ சோதனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தள்ளது.

Jallikattu bulls are raised like children - Tamil Nadu Govt

ஜல்லிக்கட்டு, காம்பாளா, சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை அனுமதிக்கும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளின் சிறப்பு சட்டங்களுக்கு எதிராகவும், இந்தியாவில் விலங்குகளை மையமாக வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக் கோரியும் ”பீட்டா” உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது நீதிபதி கே.எம். ஜோஸப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று ஏழாம் நாள் விசாரணையின் போது கலாச்சார அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதங்களை முன்வைத்தார்.

அதில், “ஜல்லிக்கட்டு நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? ஒரு விலங்கை வளர்க்கும்போது, அது நாயோ குதிரையோ​, அதை கேரட் மற்றும் குச்சி (Carrot & Stick) கொள்கைக்கு உட்படுத்த வேண்டும். அதனால் எஜமானன் விரும்பியபடி விலங்குகள் செய்யும். அதை துன்புறுத்தல் என கருத முடியாது. மனிதர்களின் நலனுக்காக செய்யப்படும் செயல்களை தடுக்க முடியாது ” எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறைகளை மனித நலன் என எவ்வாறு கூற முடியும். ஜல்லிக்கட்டு போட்டிகளால் மனித உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற மனுதாரர்கள் தரப்பு என்ன பதில் வைத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ” கலாச்சாரம் என்பதே மனிதர்களின் நலனுக்கானது தான். தென்தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், அரியலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும்தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. போட்டிகள் நடத்த பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அதன் படி மட்டுமே போட்டிகள் நடைபெறுகின்றன. எல்லா செயல்பாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் மனித உயிர்கள் பலியாகிறது. வண்டி ஓட்டும்போது, பாலங்கள் இடிந்து விழும் போது என எல்லா இடங்களிலும் உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

பின்னர், போட்டிகளில் பங்கேற்கும் மாடுகளுக்கு போட்டிகள் முடிவடைந்த பின்னர் மருத்துவ சோதனைகள் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு, “ஜல்லிக்கட்டு போட்டிகளை சிறப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நடைமுறை விதிகள் அடிப்படையில் விளையாடப்படுகின்றன. அதைத் தொடர்ந்து நடத்த கூடுதல் விதிமுறைகளை நீதிமன்றம் வழங்கினால் அதை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. போட்டிகளுக்கு முன்னர் நடைபெறுவது போல் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மருத்துவ சோதனைகள் செய்யப்படும். அதை நடைமுறை விதிகளில் தமிழ்நாடு அரசின் செயலர் உடனடியாக இணைப்பார்” என உறுதி அளித்தது.

தமிழக அரசும் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேனி தொகுதி அதிமுக எம்பி ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட இடையீட்டு மனுதாரர்கள் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

13 காளைகள் தன்வசம் உள்ளது. பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவை பங்கேற்றுள்ளது. வெளிநாடுகளில் தலைமையிடங்களை கொண்டு செயல்படுபவர்கள் தமிழக மக்களுக்கு தமிழ் கலாச்சாரம் குறித்து கூற எந்த உரிமையும் இல்லை என விஜயபாஸ்கர் தரப்பு தெரிவித்தது.

பின்னர், வாதிட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எம்.பி ரவீந்திரநாத் தரப்பு வழக்கறிஞர்கள், ” முழு அம்சங்களையும் ஆராயாமல் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முந்தைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கலாச்சாரம், விவசாயிகள் வாழ்வாதார உள்ளிற்றவற்றுள் முக்கியப் பங்கு வகிக்கும் ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது” என கோரிக்கை வைத்தனர்.

எதிர்மனுதாரர்களின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் பதில் வாதங்களில், பீட்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் தமிழக அரசின் வாதங்களுக்கு கடும் எதிர்ப்பை முன்வைத்தார்.

பீட்டா அமைப்பின் பதில் வாதத்தின் போது, “ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்த படவில்லை என்ற தமிழ்நாடு அரசு வாதம் போலியானது. நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் காளைகள் காயமடைந்துள்ளதும், மனிதர்கள் உயிரிழந்து உள்ளதும் தெரிவந்துள்ளது. அதற்காக புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வாதங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்ததாக குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் உண்மை அல்ல. அந்த தேதிகளில் போட்டிகளே நடைபெறவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியால் 14 பேர் உயிரிழந்துள்ளனர், 1119 பேர் காயமடைந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். காளைகள் உயிரிழப்பும், படுகாயமும் அடைந்துள்ளது” என பதில் வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ