தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , சேலம் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் ,ஆத்தூர் , தலைவாசல் ஆகிய பகுதிகளில் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்ய ஆய்வு செய்துள்ளனர். சேலம் என்றாலே தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக பார்க்கப் படுகிறது. நீதிக்கட்சியில் இருந்து திராவிட கழகம் வரை சேலத்திற்கு அரசியல் வரலாறு இருக்கிறது. தந்தை பெரியார், ராஜாஜி ,பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி , எம் ஜி ஆர் ஆகிய தலைவர்கள் சந்தித்து கொண்ட இடமும் சேலம் என்றே கூறலாம். திராவிட இயக்கம் வளர ஒரு முக்கிய களமாக சேலம் இருந்தது.
அந்த வகையில் நடிகரும் ,தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் தலைமையில் அக்கட்சியின் முதலாவது மாநில மாநாடு சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் ஏற்கனவே அதிமுக , தேமுதிக மற்றும் பாஜாக ஆகிய கட்சிகள் மாநாடு நடத்திய தனியாருக்கு சொந்தமான இடத்தினை பார்வையிட்டனர். பின்னர் ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியிலும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.