இந்தியாவின் வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதாகவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) கார் உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ஜாகுவார் லேண்ட் ரோவர் காரை ஓட்டி பார்த்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
ராணிப்பேட்டையில் டாடா தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ள நாள் தமிழ்நாட்டுக்கு ஒரு “பொன்னாள்” எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், டாடா மோட்டார்ஸ் குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் இந்த விழாவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். இந்தியாவின் தொழில் முகங்களில் முக்கியமான நிறுவனமாக டாடா குழுமம் திகழ்வதாகவும், ஸ்டீல், ஆட்டோமொபைல், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் தடம்பதித்து உலகளவில் பெயர் பெற்ற நிறுவனம் என்றும் அவர் பாராட்டினார்.
“டாடா என்ற பெயருக்கே ஒரு பிராண்ட் மதிப்பு உள்ளது. டாடா நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவு உள்ளது” எனக் கூறிய முதலமைச்சர், இந்தியாவின் வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதாகவும், தமிழ்நாடு மீது டாடா நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கைக்கு டிசிஎஸ், டைட்டன் போன்ற நிறுவனங்களே சான்று என்றும் தெரிவித்தார்.
டாடா ஜேஎல்ஆர் தொழிற்சாலை இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டம் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்த மாநிலம் தமிழ்நாடு என்றும் கூறினார். ராணிப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலை தமிழ்நாட்டின் திறனுக்கும் தொழில் சூழலுக்கும் அடையாளம் என்றார்.
2024 மார்ச் மாதம் டாடா ஜேஎல்ஆர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவுகூர்ந்த முதலமைச்சர், ஒப்பந்தம் கையெழுத்தான சில மாதங்களிலேயே 1,207 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், 18 மாதங்களில் நிறைவடைய வேண்டிய திட்டம் 16 மாதங்களிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். உலக தரம் வாய்ந்த கார்கள் உற்பத்தியில் எந்த நாட்டுடனும் போட்டியிடும் திறன் தமிழ்நாட்டுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
“புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகிதத்தில் மட்டும் இருக்கக் கூடாது; அவை முதலீடுகளாக மாறி செயல்பாட்டுக்கு வர வேண்டும்” எனக் கூறிய முதலமைச்சர், முதலீடுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் மாநாடு விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு கொடுக்கும் உத்தரவாதத்தை எப்போதும் காப்பாற்றும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
டாடா குழுமம் தமிழ்நாட்டில் எந்த துறையில் முதலீடு செய்தாலும் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும், முதலீட்டுக்கு யார் வந்தாலும் திராவிட மாடல் அரசு திறந்த மனதோடும் விரிந்த கரங்களோடும் வரவேற்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த விழாவில் ரத்தன் டாடா அவர்களை நினைவுகூர்ந்த அவர், புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு (R&D) திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க டாடா குழுமம் முன்வர வேண்டும் என குழுமத் தலைவர் என். சந்திரசேகரனிடம் வேண்டுகோள் விடுத்தார்.
திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது – முதல்வர் பெருமிதம்…


