இலங்கையில் இந்தியா- பாகிஸ்தான் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு, ரசிகர்கள் பெருமளவு, விமானங்களில் பயணிப்பதால், கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்து உள்ளது.
சென்னை-இலங்கை இடையே, தினமும் 8 பயணிகள் விமானங்களும், இலங்கை-சென்னை இடையே 8 பயணிகள் விமானங்களும், மொத்தம் 16 விமான சேவைகள், இயக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் போன்றவர்களுக்கு செல்லும் விமான பயணிகள், சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு விமான நிலையம் வழியாக, இணைப்பு விமானங்களில் சென்றால், விமான பயண நேரம் அதிகரித்தாலும், விமான பயண கட்டணங்கள் கணிசமாக குறைகிறது.
எனவே பெரும்பாலான பயணிகள், சென்னையில் இருந்து இலங்கை வழியாக இணைப்பு விமானங்களில், வெளிநாடுகளுக்கு செல்வதால், சென்னை- இலங்கை-சென்னை இடையே, இயக்கப்படும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இந்தியா, இலங்கை நாடுகளில், தொடர்ந்து நடந்து வருகிறது. இதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள், இந்த கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண்பதற்கு, பெருமளவு ரசிகர்கள் இலங்கைக்கு, விமானங்களில் பயணம் செய்வதால், சென்னை-இலங்கை இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதோடு மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே, இந்த டி 20 கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விக்குறி எழும்பி இருந்த நிலையில், தற்போது இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே, வரும் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இலங்கை நாட்டின் கொழும்பில், இந்த இரு நாடுகளுக்கான, டி 20 கிரிக்கெட் போட்டி நடப்பது உறுதியாகியுள்ளது.
இதை அடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், ஒருவித உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் காண்பதற்கு, கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவு இலங்கைக்கு, விமானங்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள், இலங்கைக்கு படையெடுத்து செல்வதால், சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானங்களில், டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளன.
சென்னை- இலங்கை இடையே சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.7,127. ஆனால் 13 ஆம் தேதி சென்னை-இலங்கை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், சாதாரண எக்கனாமி வகுப்பிற்கான கட்டணம் ரூ.22,073 முதல்,ரூ.25,207 வரையும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணம் ரூ.42,231 வரையிலும் அதிகரித்துள்ளன.
அதைப்போல் வரும் 14ஆம் தேதி, சென்னை- இலங்கை இடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணங்கள் ரூ.20,708 முதல் ரூ.25,207 வரையிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணங்கள், ரூ.35,217 வரையிலுமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதைப்போல் போட்டி நடக்கும் 15 ஆம் தேதி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.18,283 முதல் ரூ.19,464 வரையிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.28,660 முதல் ரூ.42,231 வரையிலும் அதிகரித்துள்ளது. இன்றைய 11 ஆம் தேதி நிலையில், இதைப் போன்ற கட்டணங்களாக இருந்தாலும், 15 ஆம் தேதி, இந்தக் கட்டணங்கள், மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
அதைப்போல் சென்னையில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானங்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் பலர், ஹைதராபாத் வழியாக இணைப்பு விமானத்தில் இலங்கை செல்கின்றனர். அந்தப் பயணிகள் இதைவிட அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர். அதை போல் திருச்சி, கொச்சி, மும்பை, டெல்லி, பெங்களூரில் இருந்தும், விமானங்களில் இலங்கைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவு சென்று கொண்டு இருக்கின்றனர். அவர்களும் வழக்கமான கட்டணங்களை விட பல மடங்கு அதிக கட்டணங்கள் செலுத்தி, பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமானக் கட்டணங்கள்..!!


