மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தண்டனையா? நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற ஒன்றிணைய வேண்டிய சூழலில் தென்னிந்திய மாநிலங்கள்!
இந்தியாவில் விரைவில் தொடங்கப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொகுதி மறுவரையறை (Delimitation) நடைமுறை, தற்போது நாட்டின் அரசியல் தளத்திலும் மாநில உரிமைகள் சார்ந்த விவாதங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தால், தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையும் என்ற அச்சமும், இதிலுள்ள சட்டரீதியான சிக்கல்களும் தீவிர விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளன.

தொகுதி மறுவரையறையின் பின்புலமும் வரலாற்றுச் சிக்கலும்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். இதன்படி, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்குக் கூடுதல் எம்.பி. தொகுதிகளும், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்குக் குறைவான தொகுதிகளும் ஒதுக்கும் நிலை ஏற்படும். 1970-களில் கொண்டுவரப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு திட்டங்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தின. ஆனால், வடமாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது.
இதன் காரணமாக, மக்கள் தொகையைக் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, 1976 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் தொகுதி மறுவரையறைக்கான நடவடிக்கைகள் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் ஒத்திவைக்கப்பட்டன (Freeze).

தற்போதைய குழப்பங்களும் அரசியல் நிலப்பாடுகளும்
தற்போது தொகுதி மறுவரையறை தொடர்பாகப் பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
- தொகுதி மறுவரையறையே வேண்டாம் (No Delimitation): இம்முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுகின்றன. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மறுவரையறையை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லை எனச் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
- தற்காலிக ஒத்திவைப்பு (Freeze Delimitation): தற்போதுள்ள இடங்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு அப்படியே ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை.
- நீதியான மறுவரையறை (Fair Delimitation): மாநிலங்களின் தற்போதைய எம்.பி. இடங்களின் சதவீதமும் பிரதிநிதித்துவமும் எந்தச் சூழலிலும் குறையாத வகையில் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை.
ஒன்றிய அரசு தரப்பில், ‘ப்ரோ-ரேட்டா’ (Pro-rata) முறையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% தொகுதிகளை உயர்த்தும் யோசனை பேசப்பட்டாலும், அது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 81-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.
நீதிபதி குரியன் ஜோசப் அறிக்கை: ஐரோப்பிய மாடல் தீர்வுகள்!
மாநில – ஒன்றிய அரசு உறவுகள் குறித்து ஆராய்ந்த நீதிபதி குரியன் ஜோசப் குழுவின் அறிக்கையில், ஐரோப்பிய நாடாளுமன்ற (European Parliament) மாதிரியைப் போன்ற சில முக்கியத் தீர்வுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
- உச்சவரம்பு நிர்ணயித்தல் (Ceiling Limit): உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு சில மாநிலங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தையும் ஆட்சியையும் முழுமையாகத் தீர்மானிக்கும் நிலையைத் தடுக்க, ஒரு மாநிலத்திற்கு அதிகபட்சமாக இத்தனை தொகுதிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பை (Ceiling) நிர்ணயம் செய்யலாம்.
- நீண்டகால ஒத்திவைப்பு (100 Years Freeze):வட மாநிலங்களில் மக்கள் தொகை சமநிலை ஏற்படும் வரை குறைந்தபட்சம் 100 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைக்கலாம்.
எழும் பிற சவால்கள் மற்றும் ஜனநாயக ஆபத்துகள்
தொகுதிகளைப் பிரிக்கும் போது ‘ஜெரிமேண்டரிங்’ (Gerrymandering) எனப்படும் எல்லைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்கும் அரசியல் உத்திகள் கையாளப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், வெறும் எண்களை மட்டும் அடிப்படையாக வைத்துத் தொகுதிகளைப் பிரித்தால். கடலோர மாவட்டங்கள் மற்றும் மீன்பிடிச் சமூகம் சார்ந்த மக்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடும். பட்டியல் இனத்தவர் (SC) மற்றும் பழங்குடியினருக்கான (ST) சுழற்சி முறை இடஒதுக்கீடு பாதிக்கப்படலாம். கிராமப்புற மற்றும் எளிய சமூக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது.

எதிர்காலத் தேவை என்ன?
வெறும் 25 ஆண்டுகள் தொகுதி மறுவரையறையை ஒத்திவைப்பதோ அல்லது தற்காலிகத் தீர்வுகளைப் பேசுவதோ தென்னிந்திய மாநிலங்களின் எதிர்காலப் பிரதிநிதித்துவத்திற்கு முழுமையான தீர்வாகாது. மாறாக, தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் கட்சி எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்து,”நீதியான மறுவரையறை” (Fair Delimitation) என்பது எது என்பதைத் தெளிவுபடுத்தி, தங்களின் பிரதிநிதித்துவப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரைவு அறிக்கையை உருவாக்கி ஒன்றிய அரசிடம் வலுவாக வலியுறுத்த வேண்டும் என்பதே தற்போதைய அவசியத் தேவையாகும்.
வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு ₹131 கோடி உதவித்தொகை: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அறிவிப்பு!
