ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அரசு பதவிகளை அடைய விரும்பும் மாணவர்களுக்கு, பொருளாதாரச் சூழல் தடையாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், ரூ.2 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியின் மூலம், யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-I, குரூப்-II போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதலும், ஓராண்டு இலவசப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகைத் தேர்வும் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் பூமிநாதன், சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சியாளர் ஆதில் பெய்க் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று மாதிரித் தேர்வை எழுதினர்.
முயற்சியும் மன உறுதியும் இருந்தால் வெற்றி பெறலாம் – பூமிநாதன்
நிகழ்ச்சியில் பேசிய கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் பூமிநாதன், யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது சிறந்த முடிவு என்று தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் எந்தப் பதவியை அடைந்தாலும், அதன் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் மாணவர்கள் இங்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, தொடர்ந்து படித்து, மன உறுதியுடன் முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றும் கூறினார்.
தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல என்றும், தொடர்ந்து முயற்சி செய்யும் மாணவர்கள் ஒருநாள் உயரிய அரசு அதிகாரிகளாக உருவாக முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மூன்று முறை தேர்வெழுதி வெற்றி பெற்றேன் – ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், தாமும் போட்டித் தேர்வில் மூன்று முறை தொடர்ந்து முயற்சி செய்த பின்னரே வெற்றி பெற்றதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தனது மகனும் தேர்வில் ஒரு இடத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவசியம் என வலியுறுத்தினார்.
கல்லூரிகளில் கிடைக்கும் இதுபோன்ற வாய்ப்புகளைப் பல மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதாகக் குறிப்பிட்ட அவர், ‘நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்’ போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு வழிகாட்டும் முக்கியமான முயற்சி என்றார்.
அரசுப் பணியில் சேர்ந்த பின்னர் சிறப்பாகப் பணியாற்றுவதுடன், மக்களுக்கான சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தமிழில் படித்தவர்களும் உயர்ந்த நிலைகளை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும்; அவற்றுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்றும் கூறினார். தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் என மாணவர்களை ஊக்குவித்தார்.
தமிழகத்திலிருந்து அதிக அதிகாரிகள் உருவாக வேண்டும் – பூமிநாதன்
செய்தியாளர்களிடம் பேசிய பூமிநாதன், யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயின்று தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறினார்.
இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், தமிழகத்திலிருந்து அதிக அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் விதைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அரசு உயர் பதவிகளுக்குத் தேவையான சிறந்த ஆளுமைகளை உருவாக்குவதற்கும் இத்தகைய முயற்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றார்.
ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிராமப்புற மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்
செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், போட்டித் தேர்வுகளில் உள்ள வாய்ப்புகளை மாணவர்கள் அறிந்துகொண்டு, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
தேர்வில் தோல்வியடைந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து படித்து முயற்சி செய்ய வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகளும் தன்னம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரூ.2 கோடி கல்வி உதவித்தொகை: மாணவர்களின் கனவுக்கு ஆதரவு
ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராக விரும்பும் மாணவர்களுக்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், ‘நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார வசதி குறைந்த மாணவர்களும் பயிற்சி பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு இந்த உதவித்தொகை ஆதரவாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
முதல்வரின் முகவரி குறைதீர்ப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக லக்ஷ்மி பிரியா நியமனம்!
